ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் - முதல்வர் சந்திரபாபு நாயுடு அழைப்பு
அமராவதி , 09 ஆகஸ்ட் (ஹி.ச.) ஆந்திராவில் ‘நாட்டை கட்டமைப்பதில் பங்காளிகள்’ என்ற புதிய மக்கள் இயக்கத்தை தொடங்க முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியா மற்றும் ‘ஸ்வர்ண ஆந்திரா’ என்ற
A


அமராவதி , 09 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஆந்திராவில் ‘நாட்டை கட்டமைப்பதில் பங்காளிகள்’ என்ற புதிய மக்கள் இயக்கத்தை தொடங்க முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியா மற்றும் ‘ஸ்வர்ண ஆந்திரா’ என்ற இலக்குகளை அடைய ஒவ்வொரு குடிமகனும் தனது பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அமராவதியில் உள்ள முகாம் அலுவலகத்தில் இந்த திட்டம் தொடர்பாக முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய அவர்,

சுதந்திர தின கொண்டாட்டங்களை வெறும் விழாவாக மட்டும் நடத்தாமல், நாட்டின் வளர்ச்சியில் ஒவ்வொரு குடிமகனுக்கும் பொறுப்பு உள்ளது என்ற உணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.

ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி

இதன் ஒரு பகுதியாக, வருகிற 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை ஆந்திராவில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடியை ஏற்றும் வகையில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

‘என் நாடு, நாடே முதன்மை’ என்ற உணர்வு ஒவ்வொரு குடிமகனிடமும் ஏற்பட வேண்டும். மக்கள் அரசின் நலத்திட்டங்களை பெறும் பயனாளிகளாக மட்டும் இல்லாமல், மாநிலம் மற்றும் நாட்டின் எதிர்காலத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காளிகளாக மாற வேண்டும் என்றும் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தினார்.

இளைஞர்கள், மாணவர்களுக்கு முக்கியத்துவம்

நாட்டின் எதிர்கால வளர்ச்சியில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் திறமைகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.

அவர்களின் புதிய சிந்தனைகள் மற்றும் கருத்துகளுக்கு உரிய வாய்ப்புகளை வழங்க வேண்டும். கிராம அளவில் தலைமைத்துவ திறமை கொண்டவர்களை அடையாளம் கண்டு ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

கிராமப்புறங்களில் முன்பு நிலவிய தன்னார்வ சேவை மனப்பான்மையை மீண்டும் உருவாக்குவதற்கு இந்த மக்கள் இயக்கம் உதவ வேண்டும் என்றும் சந்திரபாபு நாயுடு கூறினார்.

ஆண்டுதோறும் முன்னேற்ற அறிக்கை

2047-ம் ஆண்டுக்கான இலக்குகளை அடையும் வகையில் மாநிலம் ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு முன்னேற்றம் அடைந்துள்ளது என்பது குறித்து ஆகஸ்டு 15-ந் தேதி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி உத்தரவிட்டார்.

‘நாட்டை கட்டமைப்பதில் பங்காளிகள்’ திட்டம் அரசு சார்ந்த திட்டமாக மட்டும் இல்லாமல், பொதுமக்கள் அனைவரின் பங்களிப்புடன் நடைபெறும் ஒரு மக்கள் இயக்கமாக உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் அச்சென்னாயுடு, பையாவுல கேசவ், வங்கலபூடி அனிதா, தலைமைச் செயலாளர் சாயிபிரசாத் மற்றும் பல்வேறு துறை உயர் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA