வார விடுமுறையில் களைகட்டிய குற்றாலம் - அருவிகளில் ஆனந்த குளியலில் மூழ்கிய சுற்றுலா பயணிகள்
தென்காசி, 09 ஆகஸ்ட் (ஹி.ச.) தென்காசி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான குற்றாலத்தில் வார விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்டியுள்ளது. மேற்கு
Courtallam buzzes with weekend activity


தென்காசி, 09 ஆகஸ்ட் (ஹி.ச.)

தென்காசி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான குற்றாலத்தில் வார விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்டியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இதனை கொண்டாடும் விதமாக வார விடுமுறையை கழிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்தனர்.

ஜில்லென்று விழும் அருவி நீரில் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். குற்றாலம் முழுவதும் சுற்றுலா பயணிகளின் உற்சாக கூச்சலால் விழாக்கோலம் பூண்டுள்ளது.

தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கார்கள், வேன்கள் மற்றும் பேருந்துகள் மூலம் குற்றாலத்தில் குவிந்துள்ளனர்.

இதனால் குற்றாலப் பேரருவி பகுதி, பேருந்து நிலையம் மற்றும் ஐந்தருவி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், வாகனங்களை முறைப்படுத்தவும் முக்கிய சந்திப்புகளில் காவல்துறையினர் கூடுதல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b