ரூ.545 கோடி ஆன்லைன் மோசடி,837 இணையக் குற்றவாளிகள் கைது – தமிழக சைபர் கிரைம் போலீசார் அதிரடி
சென்னை, 09 ஆகஸ்ட் (ஹி.ச.) ரூ.545 கோடி மதிப்பிலான ஆன்லைன் மோசடிகள் தொடர்பாக தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையில், 601 வழக்குகளில் தொடர்புடைய 837 இணையக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். டிஜிட்டல் அரெஸ்ட், ஆன
Cyber


Bb


சென்னை, 09 ஆகஸ்ட் (ஹி.ச.)

ரூ.545 கோடி மதிப்பிலான ஆன்லைன் மோசடிகள் தொடர்பாக தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையில், 601 வழக்குகளில் தொடர்புடைய 837 இணையக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டிஜிட்டல் அரெஸ்ட், ஆன்லைன் டிரேடிங் மோசடி உள்ளிட்ட பல்வேறு இணையவழி குற்றங்கள் தொடர்பாக தமிழக சைபர் கிரைம் போலீசாரிடம் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த மோசடிகளில் பொதுமக்கள் இழந்த பணம் எந்தெந்த வங்கிக் கணக்குகளுக்கு சென்றுள்ளது என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்து பட்டியல் தயாரித்தனர்.

பணம் சென்ற வங்கிக் கணக்குகளின் அடிப்படையில் தொடர்புடைய நபர்களை அடையாளம் கண்டு, தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக ‘மணி மியூல்’ சிறப்பு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மாநிலம் முழுவதும் அனைத்து காவல் நிலையங்களும், அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆணையர்களின் மேற்பார்வையில் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டன.

இதில், இணையவழிக் குற்ற வழக்குகளில் பதிவு செய்யப்பட்ட 601 வழக்குகளில் தொடர்புடைய 837 இணையக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இடைத்தரகர் வங்கிக் கணக்குகளின் தவறான பயன்பாடு மற்றும் செயல்பாட்டைத் தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 157 புதிய முதல் தகவல் அறிக்கைகள் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளன.

இரண்டு நாட்கள் நடைபெற்ற மாநிலம் தழுவிய ‘மணி மியூல்’ சிறப்பு நடவடிக்கையில்,

- 204 செல்போன்கள்

- 185 சிம் கார்டுகள்

- 4 லேப்டாப்புகள்

- ரூ.1,02,000 ரொக்கம்

- 114 வங்கி பாஸ்புக்குகள்

- 29 காசோலைப் புத்தகங்கள்

- 73 ஏடிஎம் மற்றும் டெபிட் கார்டுகள்

- 1 கிரெடிட் கார்டு

- 2 இதர மின்னணு சாதனங்கள்

என பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணையில் மேலும் 155 செல்போன் எண்கள் மற்றும் 58 வங்கிக் கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாநில சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சிறப்பு நடவடிக்கையின்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களை பிடித்து காவல் நிலையங்களுக்கு அழைத்து விசாரணை நடத்தப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களைத் தவிர, விசாரணைக்கு தேவைப்படும் பிற நபர்களுக்கு 41-A நோட்டீஸ் வழங்கப்பட்டு, தேவைப்படும் போது விசாரணைக்கு ஆஜராகுமாறு அறிவுறுத்தி அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில் சென்னையில் மட்டும் 205 பேர் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளனர்.

ஆன்லைன் மோசடிகளில் பயன்படுத்தப்படும் ‘மணி மியூல்’ வங்கிக் கணக்குகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய குற்றவாளிகள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநில சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கவும்: கடவுச்சொல், OTP, வங்கிக் கணக்கு உள்ளிட்ட முக்கியமான தகவல்களை யாரிடமும் பகிரக்கூடாது.

சந்தேகத்திற்குரிய அழைப்புகளை தவிர்க்கவும்: வெகுமதி வழங்குவதாகவோ, அவசரமாக பணம் செலுத்துமாறோ கூறும் தேவையற்ற அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் இணைப்புகளை புறக்கணிக்க வேண்டும்.

போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும்: மோசடி செய்வதற்காக உருவாக்கப்படும் போலி இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளக் கணக்குகளை நம்ப வேண்டாம்.

முதலீட்டு மோசடிகளில் சிக்க வேண்டாம்: நம்ப முடியாத அளவுக்கு அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறப்படும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். டிஜிட்டல் அரெஸ்ட் போன்ற பெயர்களில் அவசர சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டுபவர்களையும் நம்பக்கூடாது.

வங்கிக் கணக்கை கமிஷனுக்காக வழங்கக்கூடாது: கமிஷன் தருவதாகக் கூறி பிறரின் பணப் பரிவர்த்தனைக்காக உங்கள் வங்கிக் கணக்கை பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது. இது சட்டவிரோத நடவடிக்கைகளில் சிக்க வைக்கும் அபாயம் உள்ளது.

அதிகாரப்பூர்வ செயலிகளை மட்டுமே பதிவிறக்கம் செய்யவும்: Google Play Store அல்லது Apple App Store போன்ற நம்பகமான அதிகாரப்பூர்வ தளங்களில் இருந்து மட்டுமே செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

OTP-ஐ பகிர வேண்டாம்: ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் (OTP) மற்றும் பிற முக்கியமான பாதுகாப்புக் குறியீடுகளை யாரிடமும் பகிரக்கூடாது.

பாதுகாப்பான இணையப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும்: நம்பகமான கட்டண நுழைவாயில்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நிதிப் பரிவர்த்தனைகளுக்கு பொது Wi-Fi இணைப்புகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

இரு காரணி அங்கீகாரத்தை பயன்படுத்தவும்: முக்கியமான கணக்குகளில் Two-Factor Authentication (2FA) வசதியை செயல்படுத்துவதுடன், செல்போன் மற்றும் பிற சாதனங்களின் மென்பொருளையும் தொடர்ந்து புதுப்பித்து பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ