Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 ஆகஸ்ட் (ஹி.ச.)
‘மோடி-லிமிட்டேஷன்’ என விமர்சித்து வரும் தொகுதி மறுவரையறை நடவடிக்கையை எதிர்த்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில் இன்று (ஆகஸ்ட் 9) ‘Quit Unfair Delimitation March’ பேரணி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மாணிக்கம் தாகூர்,
தொகுதி மறுவரையறை மூலம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு தண்டனையும், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தத் தவறிய வட மாநிலங்களுக்கு கூடுதல் அரசியல் பிரதிநிதித்துவமும் வழங்கப்படும் நிலை உருவாகும் எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
50 சதவீதம் வரை மக்களவைத் தொகுதிகள் அதிகரிக்கப்பட்டால், உத்தரப் பிரதேசத்தின் தொகுதிகள் 80-ல் இருந்து 120 ஆகவும், தமிழ்நாட்டின் தொகுதிகள் 39-ல் இருந்து 59 ஆகவும் உயரும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், இதனால் இரு மாநிலங்களுக்கும் இடையேயான தொகுதி எண்ணிக்கை இடைவெளி மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தொகுதி மறுவரையறை தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தையும் அதிகாரத்தையும் பாதிக்கும் என்றும், சாதிவாரி கணக்கெடுப்பு நிறைவடைவதற்கு முன்பாக மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால் பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு தொகுதிகளை முறையாக நிர்ணயிப்பதில் சிக்கல் ஏற்படும் என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை முடக்கிய அரசியலமைப்புத் திருத்தங்களால் உருவாக்கப்பட்ட பாதுகாப்பைத் தகர்க்கும் முயற்சிகளை எதிர்க்க வேண்டும் என வலியுறுத்திய அவர், தமிழ்நாட்டின் அரசியல் உரிமைகள் மற்றும் எதிர்கால தலைமுறையின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கவே இந்தப் பேரணி நடைபெறுவதாகக் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P