வரத்து குறைவால் மீன்கள் விலை உயர்வு - தூத்துக்குடி மீனவர்கள் மகிழ்ச்சி
தூத்துக்குடி, 09 ஆகஸ்ட் (ஹி.ச.) மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தொடர்ந்து வீசி வரும் பலத்த காற்று காரணமாக, குறைந்த அளவிலான நாட்டுப்படகு மீனவர்களே தங்கு கடல் மீன்பிடிப்புக்குச் சென்று வருகின்றனர். காற்று பலமாக இருப்பதால் மீன்பாடு இன்றி குறைந்த
வரத்து குறைவால் மீன்கள் விலை உயர்வு - தூத்துக்குடி மீனவர்கள் மகிழ்ச்சி


தூத்துக்குடி, 09 ஆகஸ்ட் (ஹி.ச.)

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தொடர்ந்து வீசி வரும் பலத்த காற்று காரணமாக, குறைந்த அளவிலான நாட்டுப்படகு மீனவர்களே தங்கு கடல் மீன்பிடிப்புக்குச் சென்று வருகின்றனர். காற்று பலமாக இருப்பதால் மீன்பாடு இன்றி குறைந்த அளவிலான மீன்களுடனேயே அவர்கள் கரைக்குத் திரும்புகின்றனர்.

இதன் காரணமாகக் கடந்த சில வாரங்களாகத் திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் வரத்து குறைவாகவே காணப்படுகிறது.பலத்த காற்று காரணமாகச் சீலா மீன்களின் வரத்து முற்றிலும் குறைந்திருந்தது.

இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன்களை வாங்க ஏராளமான பொதுமக்களும் வியாபாரிகளும் திரேஸ்புரம் துறைமுகத்தில் அதிகாலை முதலே குவிந்தனர். வரத்து குறைவாக இருந்தபோதிலும் தேவைகள் அதிகமாக இருந்ததால் மீன்களுக்கு நல்ல விலை கிடைத்தது.

பொதுமக்கள் அதிகம் விரும்பும் மீன்களின் வரத்து குறைந்ததால் அவற்றின் விலை உயர்ந்து காணப்பட்டது.

இன்றைய விலை நிலவரப்படி சீலா மீன்: கிலோ ரூ. 1,500, சாளை மீன்: ஒரு வட்டா ரூ. 4,000, விளைமீன்: கிலோ ரூ. 600 வரை. பாறை மீன்: கிலோ ரூ. 500 வரை,ஊழி மீன்: கிலோ ரூ. 300 முதல் ரூ. 600 வரை, நண்டு: கிலோ ரூ. 650 வரை விற்பனை ஆனது. மேலும் கண்ணாடி பாறை, நெத்திலி போன்ற மீன்களையும் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

மீன்கள் வரத்து குறைவாக இருந்ததால் ஏலம் தொடங்கிய சில மணி நேரத்திலேயே அனைத்து மீன்களும் விற்றுத் தீர்ந்தன. மீன்களுக்குச் சாதகமான விலை கிடைத்ததால் நாட்டுப்படகு மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Hindusthan Samachar / vidya.b