Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 09 ஆகஸ்ட் (ஹி.ச.)
கோவை புதூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் கோவை புறநகர் மாவட்ட செயலாளர் செ.ம. வேலுச்சாமி, தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய செ.ம. வேலுச்சாமி,
கொங்கு மண்டலத்தை அதிமுகவின் எஃகு கோட்டையாக வைத்திருந்து பணியாற்றியவர் எஸ்.பி. வேலுமணி. கொங்கு மண்டலத்தின் ஒரே வெற்றி வீரர் எஸ்.பி. வேலுமணி” என புகழாரம் சூட்டினார்.
மேலும், தற்போது ஆளும் கட்சியினர் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களையே பட்ஜெட்டில் அறிவித்து வருவதாகக் கூறிய அவர், அதிமுக ஆட்சியில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடும் கொண்டுவரப்பட்டதாக தெரிவித்தார்.
கோவையை சிங்கப்பூர் போன்று மாற்ற வேண்டும் என தான் மேயராக இருந்தபோது தீர்மானம் கொண்டு வந்ததாகவும், அதனை செயல்படுத்திக் காட்டியவர் எஸ்.பி. வேலுமணி என்றும் அவர் கூறினார்.
“எனக்கும் எஸ்.பி. வேலுமணிக்கும் இடையேயான உறவு அரசியல் வரலாற்றில் யாருக்கும் கிடைக்காதது. குடும்ப உறவு போன்று இருந்து வருகிறோம். எங்களுக்குள் எந்தக் குழப்பத்தையும் ஏற்படுத்த வேண்டாம். நாங்கள் அனைவரும் ஒன்றாகத்தான் இருக்கிறோம்” என செ.ம. வேலுச்சாமி தெரிவித்தார்.
திமுக 20 ஆண்டுகளாக கூட்டணி வைத்திருந்ததாகவும், தற்போது கூட்டணி இல்லாமல் அனாதை போன்று நிற்பதாகவும் அவர் விமர்சித்தார். தமிழக வெற்றிக் கழகத்தை விமர்சித்த அவர், அந்தக் கட்சிக்கு வாக்களித்தவர்களும், அக்கட்சிக்காக உழைத்தவர்களும் ஏன் அந்தக் கட்சியை வெற்றி பெறச் செய்தோம் என எண்ணும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
“வெற்றி பெறுவது மட்டும் முக்கியமல்ல; ஆளுமைத் திறமையும் அனுபவமும் வேண்டும். அனுபவம் உள்ளவர்கள் கட்சிக்கு தேவை. தமிழக வெற்றிக் கழகத்தில் எடுத்துச் சொல்வதற்கும் ஆளில்லை, சொல்வதைக் கேட்பதற்கும் ஆளில்லை” என்றும் அவர் விமர்சித்தார்.
வரும் தேர்தல்களில் அதிமுக நூற்றுக்கு நூறு வெற்றி பெறக்கூடிய கட்சியாக உள்ளதாகவும், எந்தக் கட்சியையும் தனித்து போட்டியிடச் சொன்னால் டெபாசிட் கூட பெற முடியாது என்றும் செ.ம. வேலுச்சாமி கூறினார்.
அதிமுகவினர் சமூக வலைதளங்களில் ஒருவரையொருவர் விமர்சிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்ட அவர், “திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தை மட்டுமே நாம் அட்டாக் செய்ய வேண்டும்” என்றார்.
கட்சி தலைமையில் நடைபெறும் சில விஷயங்களால் ஆதங்கப்படுவதில் அர்த்தமில்லை என்றும், தனக்கு வாய்ப்பு கிடைத்துவிட்டது என்பதற்காக சதி செய்து பதவியைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். புதிதாக கட்சிக்கு வருபவர்களை வரவேற்று அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை கேட்டுக்கொண்டார்.
மேலும், தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யாத தமிழக அரசைக் கண்டித்து வரும் 14ஆம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்தார். அதிமுக ஆட்சிக் காலத்தில் இரண்டு முறை விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2010ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டின்போது எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக நடத்திய போராட்டம் ஆட்சி மாற்றத்திற்கு காரணமாக அமைந்ததாகவும் செ.ம. வேலுச்சாமி தெரிவித்தார்.
இறுதியாக, “எங்களுக்குள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். தொண்டர்களும் நிர்வாகிகளும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டார்.
Hindusthan Samachar / GOKILA arumugam