குலசை 2வது ராக்கெட் ஏவுதளத்தை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு திட்டம்
தூத்துக்குடி, 09 ஆகஸ்ட் (ஹி.ச.) தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் நாட்டின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அந்த ஏவுதளத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளதாக தகவல்
Kulasekarapattinam rocket launch pad to the private sector


தூத்துக்குடி, 09 ஆகஸ்ட் (ஹி.ச.)

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் நாட்டின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அந்த ஏவுதளத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருச்செந்தூர் வட்டத்தில் உள்ள படுக்காப்பத்து, பள்ளக்குறிச்சி, மாதவன்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 2223 ஏக்கர் பரப்பளவில் சுமார் 986 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த புதிய ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திற்கு அடுத்தபடியாக, நாட்டின் இரண்டாவது பெரிய ஏவுதளமாக இது உருவாகி வருகிறது.

இங்கிருந்து சிறிய ரக செயற்கைக்கோள்களை குறைந்த செலவில், தென் துருவ சுற்றுப்பாதைக்கு நேரடியாக ஏவ முடியும் என்பது இதன் சிறப்பம்சம்.

இந்த நிலையில், குலசேகரப்பட்டினம் ஏவுதளத்தை இயக்குதல் மற்றும் பராமரித்தல் பணிகளை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கான டெண்டர் நடவடிக்கைகளை ஒன்றிய அரசின் விண்வெளி ஒழுங்குமுறை அமைப்பான இன்-ஸ்பேஸ் (IN-SPACe) நிறுவனம் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமரின் தனியார் பங்களிப்பு கொள்கையின் கீழ், ஏற்கனவே சிறிய ரக ஏவுகணையான SSLV தயாரிப்பு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு முழு ஏவுதளமே முதன்முறையாக தனியார் வசம் செல்ல உள்ளது.

நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்தை தனியாருக்கு வழங்கும் முடிவு விஞ்ஞானிகள் மற்றும் விண்வெளி ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b