மதுரை ஆவினில் ரூ.30 லட்சம் வசூல் முறைகேடு புகார் - விசாரணைக் குழு அமைத்து பொதுமேலாளர் உத்தரவு
மதுரை, 09 ஆகஸ்ட் (ஹி.ச.) மதுரை ஆவின் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் மண்டல அலுவலகங்களில் பால்பொருட்கள் விற்பனை தொடர்பாக சுமார் ரூ.30 லட்சம் வரை பண வசூலில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்துள்ள புகாரை தொடர்ந்து, விசாரணைக் குழு அமைத்து பொதுமேலாளர் முத்து மா
Madurai Aavin


மதுரை, 09 ஆகஸ்ட் (ஹி.ச.)

மதுரை ஆவின் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் மண்டல அலுவலகங்களில் பால்பொருட்கள் விற்பனை தொடர்பாக சுமார் ரூ.30 லட்சம் வரை பண வசூலில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்துள்ள புகாரை தொடர்ந்து, விசாரணைக் குழு அமைத்து பொதுமேலாளர் முத்து மாதவன் உத்தரவிட்டுள்ளார்.

மதுரை ஆவின் நிர்வாகத்தின் கீழ் ஆரப்பாளையம், அண்ணாநகர், பழங்காநத்தம், பி.பி.குளம் மற்றும் கிரைம் பிராஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் மண்டல விற்பனை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன

இந்நிலையில், ஆரப்பாளையம், பி.பி.குளம் மற்றும் பழங்காநத்தம் மண்டல அலுவலகங்களில் இருந்து முகவர்களுக்கு வழங்கப்பட்ட பால்பொருட்களுக்கான பல மாதங்களின் வசூல் தொகையான சுமார் ரூ.30 லட்சம் வரை ஆவின் நிர்வாகத்திற்கு செலுத்தப்படாமல் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில், மண்டல அலுவலக கண்காணிப்பாளர்கள் மூலம் முகவர்களிடம் பணம் வசூலிக்கப்பட்டதா, வசூலிக்கப்பட்ட தொகை ஆவின் கணக்கில் செலுத்தப்படாமல் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது முகவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலக கண்காணிப்பாளர்களிடம் விசாரணைக் குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவின் நிர்வாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Hindusthan Samachar / ANANDHAN