மேகமலை, வருசநாடு வன கிராம மக்களை வெளியேற்றும் முடிவை கைவிட வேண்டும் - சீமான்
சென்னை, 09 ஆகஸ்ட் (ஹி.ச) தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்திற்குட்பட்ட தும்மக்குண்டு, மேகமலை உள்ளிட்ட 98 மலைக் கிராமங்களில் பல தலைமுறைகளாக வசித்து வரும் 5,000-க்கும் மேற்பட்ட மக்களை அவர்களின் வாழ்விடங்களிலிருந்து வெளியேற்ற முயற்சிப்பது வேதனை அளிப்பத
Seeman


சென்னை, 09 ஆகஸ்ட் (ஹி.ச)

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்திற்குட்பட்ட தும்மக்குண்டு, மேகமலை உள்ளிட்ட 98 மலைக் கிராமங்களில் பல தலைமுறைகளாக வசித்து வரும் 5,000-க்கும் மேற்பட்ட மக்களை அவர்களின் வாழ்விடங்களிலிருந்து வெளியேற்ற முயற்சிப்பது வேதனை அளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

மேகமலை, வருசநாடு பகுதிகளில் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்கள் இலவம், முந்திரி, மிளகு, ஏலம் உள்ளிட்ட பயிர்களை விளைவித்து வருவதாகவும், இயற்கையோடு இயைந்த வாழ்வியலை மேற்கொண்டு வரும் அவர்களை வனப் பகுதிகளில் இருந்து வெளியேற்றுவது இயற்கைப் பாதுகாப்பிற்கு தீர்வாக அமையாது என்றும் அவர் கூறியுள்ளார்.

வன உயிரினங்கள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தொழிற்சாலைகள், மின் மற்றும் தொலைத்தொடர்பு கோபுரங்கள், சாலைகள், சொகுசு விடுதிகள், அடுக்குமாடிக் கட்டிடங்கள் உள்ளிட்ட கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்கிவிட்டு, பல தலைமுறைகளாக அப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களை வெளியேற்றுவது ஏற்புடையதல்ல என சீமான் தெரிவித்துள்ளார்.

மேலும், காடுகளில் நடைபெறும் சட்டவிரோத மரக்கடத்தல், வனவிலங்குகளின் வாழ்விடங்கள் மற்றும் வழித்தடங்கள் சுருங்குவது உள்ளிட்டவற்றைத் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

வன உரிமைச் சட்டம், 2006-ன் அடிப்படையில் மேகமலை, வருசநாடு பகுதிகளில் வசிக்கும் வன கிராம மக்களுக்கு உடனடியாக வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்றும், மலைக் கிராம மக்களை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ