Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 09 ஆகஸ்ட் (ஹி.ச.)
நீட் தேர்வில் 437 மதிப்பெண்கள் பெற்று மருத்துவர் கனவை நனவாக்கிய அரசுப் பள்ளி மாணவி அன்பரசிக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில்,
கனவுகளை வெல்ல வறுமை ஒரு தடையில்லை” என குறிப்பிட்டு, மருத்துவர் கனவை எட்டிப் பிடித்துள்ள மாணவி அன்பரசிக்கு மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
அன்பரசியின் தந்தை இதயநோயால் உயிரிழந்த நிலையில், குடும்பத்தை நடத்துவதற்காக அவரது தாய் பானி பூரி விற்பனை செய்து வந்ததாகவும், பள்ளி முடிந்தவுடன் தாயின் வியாபாரத்துக்கு உதவி செய்ய வேண்டிய சூழலிலும், பல்வேறு தடைகளைக் கடந்து மாணவி அன்பரசி முழுமூச்சுடன் படித்து நீட் தேர்வில் 437 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
வறுமை உள்ளிட்ட பல்வேறு சவால்களை கடந்து மருத்துவக் கனவை நோக்கி முன்னேறியுள்ள அன்பரசி, இளைய தலைமுறையினருக்கு மிகச்சிறந்த ‘Role Model’ ஆக திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஏழை மற்றும் எளிய பின்புலத்தைச் சேர்ந்த மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றும் வாய்ப்பாக நீட் தேர்வு இருப்பதாகவும், அதனை வைத்து அரசியல் செய்வதை எதிர்க்கட்சிகள் இனியாவது நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அன்பரசி போன்ற அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவு நனவாக, அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைவரும் துணை நிற்க வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ