Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 09 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழக ரயில்வே திட்டங்கள் மற்றும் தமிழக ரயில்வே துறைக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதி தொடர்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
UPA ஆட்சிக் காலத்தில் தமிழக ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியைவிட 8 மடங்கு அதிக நிதி, தற்போதைய NDA ஆட்சியில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் 19 புதிய ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், கிட்டத்தட்ட 500 கி.மீ. புதிய ரயில் பாதைகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இதுமட்டுமின்றி, மத்திய அரசின் புதிய ரயில்வே திட்டங்களுக்கு மொத்தம் 4,612 ஹெக்டேர் நிலங்கள் தேவைப்படும் நிலையில், முந்தைய திமுக அரசு இதுவரை 26 சதவீதம் மட்டுமே, அதாவது 1,178 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்தி வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்த நிலம் கையகப்படுத்துவது முக்கியமானதாக உள்ள நிலையில், தமிழக அரசு அதற்கான பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், “முந்தைய அரசைப் போல கண்மூடித்தனமான மோதல் போக்கை கடைபிடிக்காமல், ரயில்வே திட்டங்களுக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை விரைவுபடுத்தி, தமிழகத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் துணை நிற்க வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ