மக்கள் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யாத பட்ஜெட் – சி.பி.ஐ மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன்
நாமக்கல், 09 ஆகஸ்ட் (ஹி.ச.) நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற பிரச்சார நடைபயண இயக்கத்தை, அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தொடங்கி வைத்தார். ஆகஸ்ட் 6 முதல் 15-ஆம் தேதி வரை தமிழக
வீரபாண்டி


நாமக்கல், 09 ஆகஸ்ட் (ஹி.ச.)

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற பிரச்சார நடைபயண இயக்கத்தை, அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தொடங்கி வைத்தார்.

ஆகஸ்ட் 6 முதல் 15-ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பிரச்சார நடைபயணத்தின் ஒரு பகுதியாக திருச்செங்கோட்டில் இந்த நடைபயணம் நடைபெற்றது.

கட்சி அலுவலகத்தில் கொடியேற்றிய பின்னர் தொடங்கிய நடைபயணம் நான்கு ரத வீதிகள் வழியாக சென்று அண்ணா சிலை அருகே நிறைவடைந்தது.

இதில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மு. வீரபாண்டியன் கூறியதாவது:

தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் முழுமையாக மக்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் பட்ஜெட்டாக இல்லை. எதிர்பார்த்த அளவுக்கு பட்ஜெட் அறிவிப்புகள் இல்லை என்பது உண்மை. புதிய அரசு தற்போது தான் பதவியேற்றுள்ளது. போகப்போக அதன் செயல்பாடுகளை பார்க்கலாம்.

விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும், வேலையில்லா கால நிவாரண உதவி வழங்க வேண்டும், மருத்துவம் மற்றும் கல்வியை அரசு முழுமையாக பொறுப்பேற்க வேண்டும், பொதுமக்கள் மற்றும் பழங்குடியினர் மீதான தாக்குதல்களை தடுக்க வேண்டும், ரேஷன் பொருட்களின் அளவை குறைக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 10 நாட்கள் பிரச்சார நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது.

மேலும், போராடிப் பெற்ற உரிமைகள் சிதைக்கப்படக் கூடாது. சிறு, குறு தொழில்களை பாதுகாக்க வேண்டும். நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாடாளுமன்ற தொகுதி மறுவரையறையை மேற்கொள்ளக் கூடாது. ஏற்கனவே உள்ள நிலையே தொடர வேண்டும். மேகதாதுவில் அணை கட்டக்கூடாது. காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கை பெற்றுத்தர வேண்டும். விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

வீதிகளில் தொழில் செய்து வாழும் எளிய மக்களை எந்த விதத்திலும் அச்சுறுத்தக்கூடாது; அவர்களை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம், பெரியமணலி பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீட்டுமனை கேட்டு போராடி வருகின்றனர். அவர்களுக்கு உடனடியாக வீட்டுமனை வழங்க வேண்டும். திருச்செங்கோடு தேவனாங்குறிச்சி பகுதியில் பட்டா கேட்டு பல குடும்பங்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், அவற்றை பரிசீலித்து பட்டா மற்றும் வீட்டுமனை வழங்க வேண்டும்.

மேட்டூர் உபரி நீர் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.

விவசாயிகளின் பயிர்க்கடன் ஒரு பகுதி தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது குறித்து கேட்டபோது, விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு என்றார். நிதிநிலை காரணமாக ஒரே நேரத்தில் முடியாவிட்டாலும், படிப்படியாக விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றும், இதற்காக ஒன்றிய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

உதயநிதி ஸ்டாலின் குறித்து பேசியதாகக் கூறி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், பாஜக மாநில தலைவர் இதுபோன்று பேசியபோது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என எழுப்பப்பட்ட கேள்விக்கு, அரசியல் கட்சிகள் மக்கள் நலன் சார்ந்த விஷயங்களை மன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று வீரபாண்டியன் தெரிவித்தார்.

மேகதாது அணை விவகாரத்தில் அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில், தமிழக முதலமைச்சர் எம்.பி.க்கள் கூட்டத்தை கூட்டியிருப்பது குறித்து கேட்டபோது, மேகதாது பகுதியில் அணை கட்டக்கூடாது என்பதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு. எம்.பி.க்கள் கூட்டத்தை கூட்டியது நல்லது. அதேபோல் காவிரி விவகாரம் தொடர்பாகவும் அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டி தமிழகத்தின் உரிமையை பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

மேலும், செப்டம்பர் 1-ஆம் தேதி டெல்லியில் மாபெரும் பேரணி நடைபெற உள்ளதாகவும், அதற்கு பொதுமக்கள் பேராதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Hindusthan Samachar / GOKILA arumugam