Enter your Email Address to subscribe to our newsletters

நாமக்கல், 09 ஆகஸ்ட் (ஹி.ச.)
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த வெப்படை காந்திநகர் பகுதியில் வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி சம்பூர்ணம் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இரண்டாவது குற்றவாளியான திவாகர் நள்ளிரவில் வெப்படை காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
மூதாட்டி சம்பூர்ணத்தை கொலை செய்துவிட்டு அவரது வீட்டில் இருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றதாக கூறப்படும் இளைஞர் தினேஷை போலீசார் ஏற்கனவே கைது செய்திருந்தனர். இந்நிலையில், தினேஷின் தம்பியான திவாகரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
போலீசாரால் தேடப்பட்டு வந்த திவாகர், நள்ளிரவில் வெப்படை காவல் நிலையத்திற்கு வந்து சரணடைந்தார். மேலும், மூதாட்டியின் வீட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படும் 10 பவுன் தங்க நகைகளையும் போலீசாரிடம் ஒப்படைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கொலை செய்யப்பட்ட சம்பூர்ணம் எப்போதும் கழுத்தில் தங்க நகைகளை அணிந்திருப்பதை தினேஷ் அறிந்திருந்ததாகவும், மூதாட்டி வீட்டில் தனியாக இருந்த நேரத்தை நோட்டமிட்டு கொலை செய்து நகைகளை கொள்ளையடித்ததாகவும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக, கைது செய்யப்பட்ட தினேஷ் ஏற்கனவே சம்பூர்ணத்தின் வீட்டில் கபோர்டு வேலை செய்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மூதாட்டியின் வீட்டின் அமைப்பு மற்றும் அவர் அணிந்திருந்த நகைகள் குறித்து தினேஷுக்கு தெரிந்திருக்க வாய்ப்புள்ளதாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணன் தினேஷும், தம்பி திவாகரும் இணைந்து மூதாட்டியை கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளையடித்ததாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது திவாகர் சரணடைந்துள்ள நிலையில், கொலை சம்பவம் எவ்வாறு நடைபெற்றது, கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மற்றும் பணம் தொடர்பான முழுமையான விவரங்கள் குறித்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam