பழனியில் ரூ.2 கோடி கோயில் நிலம் ரூ.9 லட்சத்திற்கு பதிவு – வானதி சீனிவாசன் கண்டனம்
தமிழ்நாடு, 09 ஆகஸ்ட் (ஹி.ச.) பழனியில் தொடர்ந்து பத்திரப்பதிவு முறைகேடு தொடர்பான புகார்கள் வெளியாகி வரும் நிலையில், ஆயக்குடி பகுதியில் கன்னிகா பரமேஸ்வரியம்மன் மடத்திற்குச் சொந்தமான ரூ.2 கோடி மதிப்பிலான நிலம் ரூ.9 லட்சத்திற்கு பத்திரப்பதிவு செய்யப்ப
வானதி சீனிவாசன்


தமிழ்நாடு, 09 ஆகஸ்ட் (ஹி.ச.)

பழனியில் தொடர்ந்து பத்திரப்பதிவு முறைகேடு தொடர்பான புகார்கள் வெளியாகி வரும் நிலையில், ஆயக்குடி பகுதியில் கன்னிகா பரமேஸ்வரியம்மன் மடத்திற்குச் சொந்தமான ரூ.2 கோடி மதிப்பிலான நிலம் ரூ.9 லட்சத்திற்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள வானதி சீனிவாசன்,

பழனி கோயில் கட்டுப்பாட்டில் உள்ள தண்டபாணி மடத்திற்குச் சொந்தமான நிலம் முறைகேடாக பதிவு செய்யப்பட்டதாக ஏற்கனவே புகார் எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் சிக்கிய சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன்தான், கன்னிகா பரமேஸ்வரியம்மன் மடத்திற்குச் சொந்தமான நிலத்தையும் பதிவு செய்ததாக கூறப்படுவது மேலும் அதிர்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட சர்வே எண்ணில் உள்ள சொத்தை பத்திரப்பதிவு செய்ய வேண்டாம் என திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர், பழனி சார்பதிவாளருக்கு அறிவுறுத்தியிருந்ததாகவும், அதையும் மீறி கடந்த மாதம் அந்த நிலம் தனிநபர் பெயரில் பதிவு செய்யப்பட்டதாகவும் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுபோன்ற சம்பவங்கள் பத்திரப்பதிவுத்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை சிதைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது அனைத்து ஆவணங்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ள நிலையில், போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு நிலம் பதிவு செய்யப்படுவது பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகளின் கவனத்துக்கு வராமல் நடப்பது சாத்தியமில்லை என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோயில்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமான நிலங்கள் தொடர்ந்து தனிநபர்களின் பெயரில் முறைகேடாக பதிவு செய்யப்பட்டு அபகரிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியது என்றும், பத்திரப்பதிவுத்துறையில் வெளிப்படைத்தன்மை இல்லாததும், பொதுமக்களுக்கு எளிதில் புரியாத சில நடைமுறைகளும் இதுபோன்ற முறைகேடுகளுக்கு வழிவகுப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

எனவே, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலங்கள் அனைத்தையும் சிறப்புக் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும், முறைகேடுகள் கண்டறியப்பட்டால் அந்த நிலங்களை உடனடியாக மீட்க வேண்டும் என்றும் தமிழக அரசை வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மடங்களுக்குச் சொந்தமான நிலங்கள் தனிநபர்கள் பெயரில் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்படுவதைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுத்து, கோயில்கள் மற்றும் மடங்களின் சொத்துக்களை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam