Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 09 ஆகஸ்ட் (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு அமாவாசை தினங்களில் சாமி தரிசனத்திற்காக வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடைபெறவுள்ள ஆடி அமாவாசை திருவிழா மிகவும் விசேஷமானது.
இதனை முன்னிட்டு இன்று காலை முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரத்தில் குவிந்தனர். மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
ஆனால் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு வனத்துறையினர் அனுமதி மறுத்தனர். வனப்பகுதிக்குள் செல்ல அனுமதி இல்லை என அதிகாரிகள் அறிவித்ததால், நீண்ட தூரத்தில் இருந்து வந்த பக்தர்கள் செய்வதறியாது திகைத்தனர்.
வனத்துறையின் இந்த திடீர் அனுமதி மறுப்பால் பக்தர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றம் நிலவுகிறது. முன்கூட்டியே முறையான அறிவிப்பு வெளியிடப்படாததால் தான் இந்த குழப்பம் ஏற்பட்டதாக பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b