சென்னை அருகே 50-க்கும் மேற்பட்ட குடிநீர் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
சென்னை, 09 ஆகஸ்ட் (ஹி.ச.) சென்னை யானைகவுனி பாலத்தின் கீழ் பகுதியில் குடிநீர் நீரேற்று நிலையம் செயல்பட்டு வருகிறது. இதனை ஒட்டியுள்ள பகுதியில் ரயில்வே காவலர் குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த நீரேற்று நிலையத்தில் இருந்து நாள்தோறும் 200-க்கும் மே
சென்னை அருகே  50-க்கும் மேற்பட்ட குடிநீர் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்


சென்னை, 09 ஆகஸ்ட் (ஹி.ச.)

சென்னை யானைகவுனி பாலத்தின் கீழ் பகுதியில் குடிநீர் நீரேற்று நிலையம் செயல்பட்டு வருகிறது. இதனை ஒட்டியுள்ள பகுதியில் ரயில்வே காவலர் குடியிருப்பு அமைந்துள்ளது.

இந்த நீரேற்று நிலையத்தில் இருந்து நாள்தோறும் 200-க்கும் மேற்பட்ட குடிநீர் லாரிகள் அந்த குடியிருப்பு வழியாக சென்று வருகின்றன.

இதனால் அப்பகுதியில் உள்ள சாலை கடுமையாக சேதமடைந்துள்ளதாக குடியிருப்புவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

கனரக லாரிகள் தொடர்ந்து செல்வதால் சாலை முழுவதும் குண்டும் குழியுமாக மாறி, போக்குவரத்துக்கு பயன்படாத நிலையில் உள்ளது. குறிப்பாக மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி, சேறும் சகதியுமாக மாறி விடுவதால் குடியிருப்பை விட்டு வெளியே வர முடியாத அவல நிலை ஏற்படுவதாக ரயில்வே காவலர் குடியிருப்பு மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக குடிநீர் லாரிகளை மாற்று வழியில் இயக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

அதிகாரிகளின் அலட்சியத்தால் ஆத்திரமடைந்த குடியிருப்புவாசிகள் இன்று காலை ஒன்று திரண்டு, அவ்வழியாக வந்த 50-க்கும் மேற்பட்ட குடிநீர் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசாருடன் பழுதடைந்த சாலைகளால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகக் கூறி பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர்.

இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் உறுதி அளித்த பின்னர் அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Hindusthan Samachar / vidya.b