சென்னையில் ஆவின் பாலுக்கு கடும் தட்டுப்பாடு - வாடிக்கையாளர்கள் கடும் அவதி
சென்னை, 09 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழகத்தில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் அன்றாட தேவைகளில் முக்கிய பங்கு வகிக்கும் ஆவின் பால் குறிப்பாக தலைநகர் சென்னையில் மட்டும் நாள்தோறும் சுமார் 14 லட்சம் லிட்டர் அளவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் ஆவின் பாலுக்கு கடும் தட்டுப்பாடு - வாடிக்கையாளர்கள் கடும் அவதி


சென்னை, 09 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழகத்தில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் அன்றாட தேவைகளில் முக்கிய பங்கு வகிக்கும் ஆவின் பால் குறிப்பாக தலைநகர் சென்னையில் மட்டும் நாள்தோறும் சுமார் 14 லட்சம் லிட்டர் அளவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளுக்கு ஆவின் பால் விநியோகம் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வழக்கமாக அதிகாலையிலேயே கடைகளுக்கு வந்து சேர வேண்டிய பால் பாக்கெட்டுகள், தற்போது மிகவும் தாமதமாக வருவதாகவும், வரும் பாலின் அளவும் மிகவும் குறைவாக இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் காலையில் பால் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அட்டைதாரர்களுக்கு மட்டுமே பால் வழங்கப்படுவதாகவும், சில்லறையாக பால் வாங்க வரும் ஏழை எளிய மக்களுக்கு பால் கிடைப்பது எட்டாக்கனியாக மாறியுள்ளதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பால் கொள்முதல் குறைவு மற்றும் பண்ணைகளில் போதிய ஊழியர்கள் இல்லாதது போன்ற காரணங்களால் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் பச்சை நிற பாக்கெட்டான கிரீன் மேஜிக் பால் விநியோகம் 60 முதல் 70 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதும் மக்களிடையே கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆவின் பால் கிடைக்காததால், வாடிக்கையாளர்கள் கூடுதல் விலை கொடுத்து தனியார் பாலை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே, இந்த பிரச்சினையில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, சென்னை முழுவதும் ஆவின் பால் விநியோகத்தை சீராகவும், தட்டுப்பாடின்றியும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Hindusthan Samachar / vidya.b