Enter your Email Address to subscribe to our newsletters

தாளவாடி, 09 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஈரோடு மாவட்டம்
தாளவாடி, ஜீரகள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட காமையன்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பசவசெட்டி (62). விவசாயியான இவர், தனது 5 ஏக்கர் நிலத்தில் மஞ்சள், உருளைக்கிழங்கு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வந்தார்.
இந்த நிலையில், இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் ஒற்றை காட்டு யானை பசவசெட்டியின் தோட்டத்துக்குள் புகுந்தது. இதனை பார்த்த பசவசெட்டி, டார்ச் லைட் அடித்து யானையை விரட்ட முயன்றார்.
அப்போது எதிர்பாராதவிதமாக யானை பசவசெட்டியை நோக்கி துரத்தி வந்தது.
இதில் நிலைதடுமாறிய அவர் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
உடனே யானை அவரை காலால் மிதித்தது. இதில் பலத்த காயம் அடைந்த பசவசெட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஜீரகள்ளி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், அந்த பகுதியில் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானையை விரட்ட முயன்ற விவசாயி, யானை மிதித்து உயிரிழந்த சம்பவம் காமையன்புரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA