தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு - 2-ம் சுற்றில் 60,508 மாணவர்களுக்கு ஒதுக்கீடு
சென்னை, 09 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை-2026-ன் இரண்டாம் சுற்று கலந்தாய்வில் மொத்தம் 60,508 மாணவர்களுக்கு ஒதுக்கீட்டாணைகள் வழங்கப்பட்டுள்ளன. இரண்டாம் சுற்றில் தற்காலிக ஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கான கால அவகாசம் நிறைவடைந்த நிலையில்,
Council


N


சென்னை, 09 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை-2026-ன் இரண்டாம் சுற்று கலந்தாய்வில் மொத்தம் 60,508 மாணவர்களுக்கு ஒதுக்கீட்டாணைகள் வழங்கப்பட்டுள்ளன.

இரண்டாம் சுற்றில் தற்காலிக ஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கான கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், தங்களுக்கு கிடைத்த இடத்தை ஏற்றுக்கொண்ட 40,299 மாணவர்களுக்கு நிரந்தர ஒதுக்கீட்டாணைகளும், கிடைத்த இடத்தை ஏற்றுக்கொண்டு மேல்நோக்கிய நகர்வுக்கு உறுதி செய்த 10,648 மாணவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீட்டாணைகளும் வழங்கப்பட்டுள்ளன.

இதில், அரசுப் பள்ளிகளில் பயின்ற 6,914 மாணவர்களுக்கு நிரந்தர ஒதுக்கீட்டாணைகளும், 2,647 மாணவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீட்டாணைகளும் வழங்கப்பட்டுள்ளன.

11 அரசு பொறியியல் கல்லூரிகளில் நேரடி சரிபார்ப்பு

மாணவர்களுக்கு ஒதுக்கீட்டாணைகள் வழங்குவதற்கு முன்பாக, கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி 11 அரசு பொறியியல் கல்லூரிகளில் இருந்து 33 பேராசிரியர்கள் நேரில் வரவழைக்கப்பட்டனர்.

மாணவர்களின் தரவரிசை மற்றும் விருப்பப் பட்டியலின் அடிப்படையில் ஒதுக்கீடுகள் சரியாக வழங்கப்பட்டுள்ளதா என்பது நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது.

ஆகஸ்ட் 13-க்குள் சேர்க்கை பெற வேண்டும்

தற்காலிக ஒதுக்கீட்டாணை பெற்ற மாணவர்கள், தங்களது விருப்பப் பட்டியலில் குறிப்பிட்டுள்ள TFC

(தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம்) சென்று தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

நிரந்தர ஒதுக்கீட்டாணை பெற்ற மாணவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கல்லூரிக்கு நேரில் சென்று அசல் சான்றிதழ்களை சமர்ப்பித்து, கல்விக் கட்டணத்தைச் செலுத்தி சேர்க்கை பெற வேண்டும்.

இந்த நடைமுறைகள் ஆகஸ்ட் 9 முதல் 13-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

ஆகஸ்ட் 13-ஆம் தேதிக்குள் TFC மையத்தில் ஆவணங்களை சமர்ப்பிக்காத மாணவர்களின் இடங்களும், ஒதுக்கப்பட்ட கல்லூரியில் சேராத மாணவர்களின் இடங்களும் தானாகவே ரத்து செய்யப்படும். இந்த இடங்கள், இரண்டாம் சுற்றில் மேல்நோக்கிய நகர்வுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு ஒதுக்கப்படும்.

முதல் சுற்றில் 28,979 பேருக்கு இடம்

இதுவரை நடைபெற்ற சிறப்பு கலந்தாய்வு மற்றும் முதல் சுற்று கலந்தாய்வில் 28,979 மாணவர்களுக்கு ஒதுக்கீட்டாணைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் தற்போது கல்லூரிகளில் சேர்க்கை பெற்று வருகின்றனர்.

B.Arch சேர்க்கை

B.Arch கலந்தாய்வில் பொதுப் பிரிவில் 622 மாணவர்களுக்கும், அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் 40 மாணவர்களுக்கும் ஒதுக்கீட்டாணைகள் வழங்கப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கு இறுதியாக ஒதுக்கப்பட்ட இடங்களின் விவரங்கள் TNEA இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

செப்டம்பர் 3 முதல் துணைக் கலந்தாய்வு

+2 துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் பொதுக் கலந்தாய்வில் விண்ணப்பிக்காத மாணவர்களுக்கான B.E., B.Tech., B.Arch. துணைக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 17 முதல் 31-ஆம் தேதி வரை பெறப்படும். துணைக் கலந்தாய்வு செப்டம்பர் 3 முதல் 7-ஆம் தேதி வரை நடைபெறும்.

மாணவர்கள் தங்களது விருப்பப் பட்டியலில் விரும்பிய அளவுக்கு கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்யும் வகையில் பாதுகாப்பான மென்பொருள் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகார் மற்றும் உதவிக்கு...

ஒதுக்கீடு தொடர்பான புகார்கள் இருப்பின் tndote@tndote.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம்.

கலந்தாய்வு மற்றும் ஒதுக்கீடு தொடர்பான சந்தேகங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள 110 தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையங்களை தொடர்புகொள்ளலாம். இந்த மையங்களின் முகவரி மற்றும் தொடர்பு எண்கள் TNEA இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும், காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்க்க தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் 10 இணைப்புகளுடன் கூடிய அழைப்பு மையம் செயல்பட்டு வருகிறது.

அழைப்பு மைய எண்: 1800-425-0110

மேலும், tneacare@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் மாணவர்கள் தங்களது சந்தேகங்களைத் தெரிவித்து விளக்கம் பெறலாம்.

Hindusthan Samachar / P YUVARAJ