Enter your Email Address to subscribe to our newsletters

ஹைதராபாத் , 09 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஹைதராபாத்தில் உள்ள நல்சார் சட்டப் பல்கலைக்கழகத்தின் 2026-ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்தை சிறப்பு விருந்தினராக அழைக்கக்கூடாது என்று மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தியில்.
இதுதொடர்பாக சுமார் 450 மாணவர்கள் கையெழுத்திட்டு, பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கடிதம் அளித்துள்ளனர்.
தலைமை நீதிபதி சூர்யகாந்த் சமீபத்தில் நீட் போராட்டம் தொடர்பான வழக்கு விசாரணையின்போது தெரிவித்த கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூலை 22-ந் தேதி டெல்லியில் நடைபெற்ற நீட் போராட்டம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, போராட்டக்காரர்கள் மீது போலீசார் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பான வீடியோக்களை தாமாக முன்வந்து விசாரிக்க தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு மறுத்ததாக கூறப்படுகிறது.
அந்த விசாரணையின்போது, வீடியோக்களை பார்ப்பதில் தங்களுக்கு ஆர்வம் இல்லை என்றும், தங்களது நேரத்தையும் மற்றவர்களின் நேரத்தையும் வீணாக்க வேண்டாம் என்றும் தலைமை நீதிபதி தெரிவித்ததாக மாணவர்கள் கூறியுள்ளனர். இந்த கருத்துகள் போராட்டக்காரர்களின் உணர்வுகளை மதிக்காத வகையிலும், பொறுப்பற்ற முறையிலும் இருப்பதாக மாணவர்கள் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, தலைமை நீதிபதி சூர்யகாந்தை பட்டமளிப்பு விழாவின் சிறப்பு விருந்தினராக அழைக்கக்கூடாது என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதற்கு ஆதரவாக மாணவர்கள் ஒரு வேளை உணவு சாப்பிடாமல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
தங்களது கோரிக்கையை பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்காவிட்டால், ஒரு வார கால அவகாசத்துக்கு பிறகு போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம் என்றும் மாணவர்கள் எச்சரித்துள்ளனர்.
அதே நேரத்தில், 2026-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெறும் தேதி மற்றும் சிறப்பு விருந்தினர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நல்சார் பல்கலைக்கழகம் இதுவரை வெளியிடவில்லை.
இருப்பினும், பட்டமளிப்பு விழாவுக்கு இந்திய தலைமை நீதிபதியை அழைப்பது நல்சார் பல்கலைக்கழகத்தில் நீண்டகாலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறையாக உள்ளது.
இந்த நிலையில், தலைமை நீதிபதி சூர்யகாந்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்துவது இது 2-வது முறையாகியுள்ளது. மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்சஸ் (TISS) நிறுவனத்தின் 86-வது பட்டமளிப்பு விழாவுக்கும் அவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.
ஆனால், மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தக்கூடும் என்ற உளவுத்துறை தகவல் காரணமாக, அந்த பட்டமளிப்பு விழா கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது நல்சார் பல்கலைக்கழகத்திலும் இதேபோன்ற எதிர்ப்பு எழுந்துள்ளதால், பட்டமளிப்பு விழா தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA