Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 09 ஆகஸ்ட் (ஹி.ச.)
தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரியும், பாரத ராஷ்டிர சமிதி கட்சி தலைவருமான கே.சந்திரசேகர ராவ் நடத்திய அளவுக்கு நாட்டில் வேறு யாரும் யாகங்களை நடத்தியிருக்க முடியாது என்று அந்த கட்சியின் செயல் தலைவரும், முன்னாள் மந்திரியுமான கே.டி.ராமராவ் (கேடிஆர்) கூறினார்.
இதுகுறித்து தனது அறிக்கையில் அவர் கூறியதாவது:-
தெய்வ பலம் கிடைக்க வேண்டுமென்றால் முதலில் மனித முயற்சி இருக்க வேண்டும்.
யாகங்களை நடத்துவதுடன், அரசுகள் தங்களுடைய பொறுப்புகளையும் முறையாக நிறைவேற்ற வேண்டும். ஆனால், காங்கிரஸ் தலைவர்கள் அற்ப அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
பி.ஆர்.எஸ். மூத்த தலைவர் ஹரீஷ் ராவ் கோவில்களுக்கு செல்வதை கேலி செய்வது கண்டிக்கத்தக்கது.
விவசாயம் குறித்து புரிதல் இல்லை
முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டிக்கு விவசாயம் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து குறைந்தபட்ச புரிதல்கூட இல்லை.
தன்னை பாலமூர் பகுதியைச் சேர்ந்தவர் என்று கூறிக்கொள்ளும் அவர், அந்த மாவட்டத்திற்கு பாசன நீர் வழங்குவதில் முழுமையாக தோல்வி அடைந்துள்ளார்.
தெலுங்கானாவின் நீர் உரிமைகளை பாதுகாப்பதில் மாநில அரசு அலட்சியமாக செயல்படுகிறது.
ஆந்திரப் பிரதேச அரசு பொதிரெட்டிபாடு வழியாக தண்ணீரை எடுத்துச் செல்லும் நிலையில், தெலுங்கானா அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது?
கோதாவரி நதிநீர் வாரிய கூட்டம் தொடர்பாகவும் அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்.
24 மணி நேர மின்சாரம்
தெலுங்கானாவில் 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் வழங்கப்படுவதாக அரசு கூறுகிறது.
அவ்வாறு மின்சாரம் வழங்கப்படும் இடத்தை அரசு நிரூபிக்க வேண்டும்.
ஆட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சியில் இருந்தாலும் மாநிலத்தின் நலனுக்காகவே பி.ஆர்.எஸ். செயல்படும். ‘ஹைட்ரா’ என்ற பெயரில் ஏழை மக்களை அரசு பழிவாங்குகிறது.
தெலுங்கானாவின் நீர் உரிமைகளை பாதுகாப்பதற்காக, கே.சந்திரசேகர ராவ் தலைமையில் கடந்த கால தெலுங்கானா இயக்கத்தைப் போன்ற மற்றொரு மிகப்பெரிய போராட்டத்தை நடத்த பி.ஆர்.எஸ். தயாராக உள்ளது.
அரசின் தோல்விகளுக்கு எதிராக கட்சி தொடர்ந்து தீவிரமாக போராடும்.
இவ்வாறு கேடிஆர் கூறினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA