தென்காசியில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 3,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - இருவர் கைது
தென்காசி, 09 ஆகஸ்ட் (ஹி.ச.) தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான வாகனங்களில் ரேஷன் அரிசி மூட்டைகளானது கேரளாவிற்கு சட்ட விரோதமாக கடத்திக் கொண்டு செல்லப்பட்டு வருவதாக போலீசாருக்கு தொடர் புகார்கள் வந்த நிலையில், தென்காச
Prison


தென்காசி, 09 ஆகஸ்ட் (ஹி.ச.)

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான வாகனங்களில் ரேஷன் அரிசி மூட்டைகளானது கேரளாவிற்கு சட்ட விரோதமாக கடத்திக் கொண்டு செல்லப்பட்டு வருவதாக போலீசாருக்கு தொடர் புகார்கள் வந்த நிலையில், தென்காசி மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் ஆங்காங்கே கடந்த சில தினங்களாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், புளியங்குடி மற்றும் பாவூர்சத்திரம் பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது, அந்த வழியாக வந்த வாகனத்தை மறித்து சோதனை செய்தனர்.

அப்போது, புளியங்குடி பகுதியில் இருந்து கேரளாவிற்கு கடத்திக் கொண்டு செல்ல திட்டமிட்டு இருந்த சுமார் 1,680 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து அதனை கடத்திக் கொண்டு சென்ற ராஜபாளையம் பகுதியை சேர்ந்த வைரமுத்து (வயது 30) என்ற நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல், பாவூர்சத்திரம் பகுதியில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் 1,350 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் அதனை கடத்திக் கொண்டு சென்ற ஆலங்குளம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 22) என்ற நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு கடத்திக் கொண்டு செல்ல திட்டமிட்டு இருந்த 3,030 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் கடத்தல் காரர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN