தட்கல் திட்டத்தில் விண்ணப்பித்த 60,120 விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் - அன்புமணி
தமிழ்நாடு, 09 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழ்நாட்டில் தட்கல் திட்டத்தின் கீழ் இலவச வேளாண் மின் இணைப்புக்காக விண்ணப்பித்துள்ள 60,120 விவசாயிகளுக்கும் உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுத
அன்புமணி


தமிழ்நாடு, 09 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழ்நாட்டில் தட்கல் திட்டத்தின் கீழ் இலவச வேளாண் மின் இணைப்புக்காக விண்ணப்பித்துள்ள 60,120 விவசாயிகளுக்கும் உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நிலத்தடி நீரை நம்பி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு மிகவும் முக்கியமானதாக உள்ள நிலையில், தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த 47,554 விவசாயிகளுக்கு கடந்த 8 மாதங்களாக மின் இணைப்பு வழங்கப்படாமல் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், டிசம்பர் 31-ஆம் தேதி வரை 47,554 விவசாயிகள் விண்ணப்பித்ததாகவும், முதல் கட்டமாக 10 ஆயிரம் பேருக்கு 15 நாட்களில் மின் இணைப்பு வழங்கப்படும் என மின்வாரியம் அறிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், 8 மாதங்கள் கடந்தும் ஒருவருக்குக் கூட மின் இணைப்பு வழங்கப்படவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தட்கல் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெறுவதற்காக விவசாயிகள் குதிரைத்திறனுக்கு ஏற்ப ரூ.2.50 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை கட்டணம் செலுத்தியுள்ளனர். 47,554 விவசாயிகளும் சேர்ந்து சுமார் ரூ.1,250 கோடியை முன்பணமாக செலுத்தியுள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த 2023-ஆம் ஆண்டு இதே திட்டத்தில் விண்ணப்பித்த 12,566 விவசாயிகள் ரூ.250 கோடிக்கும் அதிகமாக முன்பணம் செலுத்தியும், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக மின் இணைப்புக்காக காத்திருப்பதாக அவர் கூறியுள்ளார். இதனால், தட்கல் திட்டத்தில் விண்ணப்பித்த 60,120 விவசாயிகளிடமிருந்து மொத்தம் சுமார் ரூ.1,500 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மின்சார இணைப்பு கிடைக்காததால் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி குறுவை சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் வருவாய் இழப்பை சந்தித்துள்ளதாகவும், பலர் மின் இணைப்புக்கான கட்டணத்தை செலுத்த வட்டிக்கு கடன் வாங்கியுள்ளதால் அவர்களின் கடன் சுமையும் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தட்கல் திட்ட விதிகளின்படி விண்ணப்பித்த 15 முதல் 90 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும் எனவும், ஆனால் பல ஆண்டுகளாக விவசாயிகளை காத்திருக்க வைப்பது நியாயமற்றது என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டாலும், தேர்தல் அறிவிப்பு வெளியானதால் இணைப்புகள் வழங்கப்படவில்லை என கூறப்படுவதாகவும், தேர்தலுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த தவெக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது, வறட்சியால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது, பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் விவசாயிகள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களிடமிருந்து ரூ.1,500 கோடியை வசூலித்துக் கொண்டு மின் இணைப்பு வழங்காமல் இருப்பது அவர்களுக்கு கூடுதல் துயரத்தை ஏற்படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.

எனவே, தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து காத்திருக்கும் 60,120 விவசாயிகளுக்கும் உடனடியாக இலவச வேளாண் மின் இணைப்புகளை வழங்க வேண்டும் என தமிழக அரசையும் மின்சார வாரியத்தையும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam