Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 09 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் கோவில் வளாகம் திருவிழா காலம் போல் காட்சியளித்தது.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும், சிறந்த பரிகார ஸ்தலமாகவும் விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர். கோவில் கடற்கரை பகுதியில் உள்ள நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடிய பக்தர்கள், ரூ.100 கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசன வரிசையில் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பொது தரிசன வரிசையில் சுமார் 2 மணி நேரம் ஒரே இடத்தில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டதாகவும் பக்தர்கள் தெரிவித்தனர். பக்தர்கள் விரைந்து தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், முடி காணிக்கை செலுத்துவதற்காகவும், நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடுவதற்காகவும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
பக்தர்களின் வருகை அதிகரித்ததால் திருச்செந்தூர் நகர் பகுதியில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் குவிந்தன. இதனால் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Hindusthan Samachar / GOKILA arumugam