Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 09 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருச்சி திருவானைக்காவல் கன்னிமார் தோப்பு பகுதியில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் குடியிருப்புகளை காலி செய்யக் கோரிய தனிநபருக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷை நேரில் சந்தித்து மனு அளிப்பதற்காக நீண்ட நேரமாக காத்திருந்தனர். இதையடுத்து, பொதுமக்கள் காத்திருப்பதை அறிந்த காவல்துறையினர், அமைச்சரின் பயண வழித்தடத்தை மாற்றியமைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அமைச்சர் விரைவில் நேரில் வந்து சந்திப்பார் என உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியல் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
பின்னர் போராட்டக் களத்திற்கு நேரில் வந்த அமைச்சர் ரமேஷ், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பாலகிருஷ்ணன் என்ற ரியல் எஸ்டேட் தொழிலதிபர் குடியிருப்புகளை காலி செய்யக் கோரி நீதிமன்ற உத்தரவு பெற்றுள்ளதாகவும், அந்த உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்தினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், கால அவகாசம் வழங்கும் வகையில் நடவடிக்கையை நிறுத்தி வைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், இதுதொடர்பாக அரசு மீது பாலகிருஷ்ணன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், அதற்கு அரசு பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து பொதுமக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.
அமைச்சரின் உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam