Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 09 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் அப்பாவு தனது எக்ஸ் தளத்தில் தமிழக அரசையும், தவெக தலைவர் விஜய்யையும் கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில்,
தவெக ஆட்சி ஆரம்பித்த நாள் முதல் அரசு தலைமைச் செயலகத்தை அமைச்சர்கள் மக்கள் பணிக்கு பயன்படுத்தாமல் தவெக கட்சி அலுவலகமாக பயன்படுத்தி வருவதோடு, தற்போது தமிழக தலைமைச் செயலாளரையும் தவெக தலைமைச் செய்தித் தொடர்பாளராக மாற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது; நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அப்பாவு தெரிவித்துள்ளார்.
மேலும், நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை குறித்து முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும் என தலைமைச் செயலாளர் அழைப்பு விடுத்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், ஒன்றிய அரசு கொண்டு வர உள்ள FCRA மசோதா குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திற்கும் தமிழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை தலைமைச் செயலாளர் அழைப்பாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.
தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 5 மாநில முதலமைச்சர்கள் மற்றும் தென் மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தை, தேர்தல் நேரத்தில் விஜய் “இது ஒன்றும் அப்படி பெரிய பிரச்சினை அல்ல” என விமர்சித்ததாகவும் அப்பாவு குறிப்பிட்டுள்ளார். தற்போது ஆட்சியைத் தக்க வைக்க காங்கிரஸின் வஞ்சக வலையில் சிக்கி இதுபோன்ற கூட்டத்தை நடத்துவது வெட்கமாக இல்லையா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், தொகுதி மறுவரையறை போன்ற தேசியப் பிரச்சினையில் இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளையும் அழைத்து ஆலோசிக்காமல், தமிழக சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் எதிர் கருத்து தெரிவித்த விஜய்யை ராகுல்காந்தி தூண்டிவிட்டு பின்னால் இருந்து வேடிக்கை பார்ப்பதன் மர்மம் என்ன என்றும் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.
நீட் தேர்வை காங்கிரஸ் கொண்டு வந்ததாகவும், அதை பாஜக தொடர்வதாகவும் கூறியுள்ள அப்பாவு, தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் வழங்கக்கூடாது என்பதில் காங்கிரஸும் பாஜகவும் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதாக விமர்சித்துள்ளார்.
இந்த இரு கட்சிகளுக்கும் துணை நிற்பது தமிழக மக்களுக்கு செய்யும் “எட்டப்பர் வேலை” என்பது மக்களுக்கு தெரியாதா என்றும் அவர் தனது பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P