Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 09 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட அத்தாணி பிரிவு, மடையன் கோவில் பகுதியில் சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. அதன் உடல் பெருமளவு சிதைந்த நிலையில் இருந்தது.
அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வனக் கண்காணிப்பாளர் மைதிலி மற்றும் வனக் காவலர் பிரவீன் ஆகியோர், அந்தச் சிறுத்தையின் நகங்கள் மற்றும் பற்கள் உள்ளிட்ட உடற்பகுதிகளை அகற்றி எரித்ததாகக் கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு புதிதாகப் பொறுப்பேற்ற வனச்சரக அலுவலர் நந்தினிக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் மூலம் இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அவர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தியதில், சிறுத்தை இறந்து கிடந்ததும், பின்னர் அதன் உடற்பகுதிகள் அகற்றப்பட்டு எரிக்கப்பட்டதும் உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து நந்தினி மாவட்டத்திலுள்ள உயர் வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, வனவிலங்கு குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையின் முடிவில், சிறுத்தையின் உடற்பகுதிகளை அகற்றியது மற்றும் இச்சம்பவம் குறித்த தகவலை உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் மறைத்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், மைதிலி மற்றும் பிரவீன் ஆகியோரைப் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வன அலுவலர் குமிலி வெங்கட அப்பல நாயுடு நேற்று உத்தரவிட்டார்.
மேலும் இது தொடர்பாக துறை ரீதியான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / vidya.b