பா.ஜ.க எம்.பி தருண் சுக் இல்லம் முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்
அமிர்தசரஸ், 01 செப்டம்பர் (ஹி.ச.) 1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் தண்டிக்கப்பட்ட மறைந்த சஜ்ஜன் குமாரின் இல்லத்திற்கு பாஜக தலைவர்கள் இரங்கல் தெரிவிக்கச் சென்றதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, இன்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பார
பாஜக எம்.பி தருண் சுக் இல்லம் முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்


அமிர்தசரஸ், 01 செப்டம்பர் (ஹி.ச.)

1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் தண்டிக்கப்பட்ட மறைந்த சஜ்ஜன் குமாரின் இல்லத்திற்கு பாஜக தலைவர்கள் இரங்கல் தெரிவிக்கச் சென்றதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, இன்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் ராஜ்யசபா எம்.பி தருண் சுக் இல்லத்தின் முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சஜ்ஜன் குமார் கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி உயிரிழந்தார். அவரது இல்லத்திற்கு பாஜக தலைவர்கள் சென்றதற்கு ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

1984 கலவர வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்வதன் மூலம் பாஜக சீக்கிய சமூகத்தை அவமதிப்பதாக அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

போராட்டத்திற்கு தலைமை தாங்கிய ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ அஜய் குப்தா, பாஜகவின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பியதுடன், 1984 கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் விவகாரத்தில் அக்கட்சியின் நிலை என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

பாஜக எம்.பி தருண் சுக் இல்லத்திற்கு நாங்கள் போராட்டம் நடத்தச் செல்கிறோம். இந்த போராட்டத்திற்கான காரணம், 1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்களின் இல்லங்களுக்கு பாஜகவினர் செல்வதுதான்.

பாஜக மத அரசியலிலும், வாக்கு வங்கி அரசியலிலும் மட்டுமே ஈடுபடுகிறது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று நான் கேட்க விரும்புகிறேன். அவர்கள் சீக்கியர்களுடன் நிற்கிறார்களா அல்லது அவர்களை படுகொலை செய்ததில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்களுடன் நிற்கிறார்களா?

ஆம் ஆத்மி கட்சியாக, பாஜகவின் உண்மை முகத்தை பஞ்சாப் முழுவதும் அம்பலப்படுத்த விரும்புகிறோம். சீக்கியர்களுக்கு எதிரான மனப்பான்மை கொண்ட, பஞ்சாபை நியாயமற்ற முறையில் நடத்தும், வாக்கு வங்கி அரசியலுக்காக கலவரங்களைத் தூண்டுவதில் நம்பிக்கை கொண்ட கட்சிதான் பாஜக.

நாங்கள் அவரது இல்லத்திற்கு பேரணியாகச் சென்று, சீக்கிய சமூகம் தொடர்பாக அவரது நிலைப்பாடு என்ன என்பதை கேட்போம், அவர் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறாரா அல்லது எதிராக இருக்கிறாரா என்பதை அறிய விரும்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

போராட்டத்தின் போது எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்க, தருண் சுக் இல்லத்திற்கு வெளியே பஞ்சாப் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சட்டம் ஒழுங்கை பராமரிக்க காவல்துறையினர் உயர் எச்சரிக்கையில் இருப்பதாக கூடுதல் துணை காவல் ஆணையர் ஹர்பால் சிங் தெரிவித்தார்.

அவர் கூறுகையில்,

மூத்த பாஜக தலைவர் தருண் சுக் இல்லத்திற்கு அருகில் நாங்கள் காவல் படையை குவித்துள்ளோம். ஏனெனில் சஜ்ஜன் குமார் இல்லத்திற்கு பாஜக தலைவர்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்த கூடியுள்ளனர்.

சட்டம் ஒழுங்கை பராமரிக்க நாங்கள் பெரும் படையை குவித்துள்ளோம். இந்த பாதுகாப்பு நடவடிக்கை சட்டம் ஒழுங்கு துணை காவல் ஆணையரின் மேற்பார்வையில் நடைபெறுகிறது. அவருக்கு உதவியாக மூன்று காவல் கண்காணிப்பாளர்கள், மூன்று கூடுதல் துணை ஆணையர்கள், நான்கு உதவி ஆணையர்கள் மற்றும் சுமார் 100 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடைந்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். யாரும் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

என்று அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b