Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 செப்டம்பர் (ஹி.ச.)
தகுதிநீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்த நிலையில், அதிமுகவைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்ற சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
கொறடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாகக் கூறி, 6 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதிநீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்தது.
இந்நிலையில், அவர்கள் அளித்த ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றதை ரத்து செய்யக் கோரி அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல்.ரவி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணை நடைபெற்றது.
அப்போது, மனுதாரர் தரப்பில், ராஜினாமா தொடர்பாக சபாநாயகர் உரிய விசாரணை நடத்தவில்லை என்றும், ராஜினாமா கடிதம் அளித்த சில நிமிடங்களிலேயே எம்.எல்.ஏ.க்கள் தவெகவில் இணைந்ததாகவும் வாதிடப்பட்டது.
தகுதிநீக்க புகார் அளித்தவருக்கு எந்த நோட்டீசும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
சபாநாயகர் தரப்பில், எம்.எல்.ஏ.க்கள் சுய விருப்பத்துடன் ராஜினாமா செய்தார்களா என்பதை மட்டுமே சபாநாயகர் விசாரிக்க முடியும் என்றும், பணம் அல்லது பதவி உள்ளிட்ட காரணங்களுக்காக கட்சி மாறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை தகுதிநீக்க நடவடிக்கையில்தான் விசாரிக்க முடியும் என்றும் வாதிடப்பட்டது.
ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் தரப்பில், ராஜினாமாக்கள் உண்மையானவை என்றும், சுய விருப்பத்தின் அடிப்படையில் அளிக்கப்பட்டதால் அவற்றை சபாநாயகர் ஏற்றது சட்டப்படி செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P