Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 01 செப்டம்பர் (ஹி.ச.)
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள அமராவதி அணையில் இருந்து அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும் போது, தாராபுரம் முதல் கரூர் மாவட்ட எல்லை வரையிலான சுமார் 54 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன.
மேலும், 147 கிராமங்கள் மற்றும் அவற்றைச் சார்ந்துள்ள 25 கூட்டு குடிநீர் திட்டங்களுக்கும் அமராவதி ஆற்று நீர் முக்கிய ஆதாரமாக உள்ளது.
இந்த நிலையில், அமராவதி அணையில் போதிய அளவு தண்ணீர் இருப்பு இருந்தபோதிலும், கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் மற்றும் பாசனத் தேவைக்காக போதிய அளவு தண்ணீர் திறந்து விடப்படவில்லை என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதுதொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் அமராவதி அணையில் இருந்து திருப்பூர் மாவட்டம் தாராபுரம், மூலனூர் மற்றும் கரூர் மாவட்டத்தின் கடைமடை பகுதிகளின் குடிநீர் மற்றும் குறிப்பிட்ட பயிர்களின் பாசனத் தேவையை கருத்தில் கொண்டு படிப்படியாக தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
நீதிமன்ற உத்தரவின்படி முதல் இரண்டு நாட்களுக்கு தினமும் 3,000 கனஅடி தண்ணீரும், அடுத்த இரண்டு நாட்களுக்கு தினமும் 2,000 கன அடி தண்ணீரும், அதன்பின்னர் 1,000 கனஅடி தண்ணீரும் திறந்து விட வேண்டும் என்றும், தொடர்ந்து ஏழு நாட்கள் நீர் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
ஆனால், நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்ட அளவை விட குறைவாக தினமும் 1,000 கனஅடி தண்ணீர் மட்டுமே திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
இதனால் கரூர் மாவட்டத்தின் கடைமடை பகுதிகள் வரை போதிய அளவு தண்ணீர் சென்று சேராது என்றும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
இதையடுத்து பள்ளப்பட்டி பிரிவு, கரூர் மாவட்ட எல்லையான ஒத்தமந்துறை, திருப்பூர் மாவட்டத்தின் புதுப்பை, அக்கரைப்பாளையம் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் அரசியல் கட்சியினர் மற்றும் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாராபுரம்–கரூர் சாலையில் ஒத்தமந்துறை அருகே நடைபெற்ற முக்கிய மறியல் போராட்டத்திற்கு திமுக கிழக்கு ஒன்றியச் செயலாளர் பழனிச்சாமி மற்றும் அதிமுக மாவட்டக் கழகச் செயலாளர் செல்வகுமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இந்தப் போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் கயல்விழி செல்வராஜ், வழக்கறிஞர் சிவகுமார், அதிமுகவைச் சேர்ந்த காமராஜ், பங்க் மகேஷ்குமார், அதிமுக நிர்வாகி வெற்றிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது கால்நடைகளுடன் போராட்டத்தில் பங்கேற்றனர்.
போராட்டக்காரர்கள், “நீதிமன்ற உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும், “அமராவதி ஆற்றில் போதிய அளவு தண்ணீர் திறக்க வேண்டும்”குடிநீருக்காக போராடும் மக்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
மேலும், முதல் கட்டமாக தினமும் 3,000 கனஅடி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும், அதன்பின்னர் 2,000 கனஅடி மற்றும் 1,000 கனஅடி என படிப்படியாக நீர் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அணைக்கு இடைப்பட்ட காலத்தில் நீர்வரத்து அதிகரித்தால் கூடுதல் தண்ணீரையும் அமராவதி ஆற்றில் திறந்து விட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இதனிடையே, சாலை மறியல் போராட்டத்தையடுத்து தாராபுரம் டிஎஸ்பி சிவகுமார் தலைமையில் மூலனூர் காவல் ஆய்வாளர் கோவர்த்தனாம்பிகை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட போலீஸார் சம்பவ இடத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சாலை மறியலில் ஈடுபடக் கூடாது என்றும், தடையை மீறி போராட்டம் நடத்தினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸார் எச்சரித்தனர்.
இருப்பினும், போராட்டக்காரர்கள் எங்களுக்கு குடிநீர்தான் வேண்டும், முடிந்தால் அனைவரையும் கைது செய்யுங்கள் எனக் கூறி தொடர்ந்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
ஆயிரக்கணக்கான பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் இணைந்து நடத்திய இந்தப் போராட்டத்தால் தாராபுரம்–கரூர் சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
அமராவதி ஆற்றில் போதிய அளவு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் பெருமளவில் திரண்டதால் ஒத்தமந்துறை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டக்காரர்களுடன் போலீஸார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam