ரூ.1000 கோடி நிதி நிறுவன மோசடி,இளைஞர் தற்கொலைக்கு காவல்துறையே பொறுப்பு – அன்புமணி இராமதாஸ் குற்றச்சாட்டு
சென்னை, 01 செப்டம்பர் (ஹி.ச.) மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் முதலீடு செய்த பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறி ரூ.1000 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள எப்.க்யூ.எல் (FQL) நிதி நிறுவன விவகாரத்தில், முதல
Anbumani


சென்னை, 01 செப்டம்பர் (ஹி.ச.)

மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் முதலீடு செய்த பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறி ரூ.1000 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள எப்.க்யூ.எல் (FQL) நிதி நிறுவன விவகாரத்தில், முதலீடு செய்து ஏமாந்த திண்டுக்கல் மாவட்ட இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இத்தகைய மோசடி நிறுவனங்களை முன்கூட்டியே தடுக்கத் தவறிய காவல்துறையே இந்த மோசடிக்கும், உயிரிழப்புக்கும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் முதலீடு செய்த தொகையை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து குறுகிய காலத்தில் இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பெருமளவில் முதலீடுகளைத் திரட்டிய எப்.க்யூ.எல் (FQL) நிதி நிறுவனம், சுமார் ரூ.1000 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக முதலீட்டாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூர், அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தங்களிடம் முதலீடு செய்யப்படும் பணத்தை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டித் தருவதாகவும், குறுகிய காலத்தில் முதலீட்டுத் தொகையை இரட்டிப்பாக்கித் தருவதாகவும் அந்நிறுவனம் விளம்பரம் செய்ததாக அவர் கூறியுள்ளார்.

முதலீட்டாளர்களை கவரும் வகையில் தனி செயலி ஒன்றையும் அறிமுகப்படுத்தியதாகவும், மக்களிடையே முதலீடுகளைத் திரட்டுவதற்காக பெருமளவில் முகவர்களை நியமித்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் தங்களிடம் இருந்த பணத்தை லட்சக்கணக்கில் முதலீடு செய்ததாகவும், அதிக லாபம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் சிலர் தங்களின் நிலம் உள்ளிட்ட சொத்துகளை விற்றும், அடகு வைத்தும் முதலீடு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், உறுதியளிக்கப்பட்ட காலத்தில் முதலீட்டுத் தொகையை திருப்பி வழங்காமல் நிறுவனம் காலம் தாழ்த்தி வந்ததாகவும், பின்னர் சில நாட்களுக்கு முன்பு நிறுவனம் மூடப்பட்டதாகவும் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் இந்த நிறுவனம் சுமார் ரூ.1000 கோடி அளவுக்கு மோசடி செய்திருக்கலாம் என முதலீட்டாளர்கள் குற்றஞ்சாட்டி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் காசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இராசு என்ற இளைஞர், இந்த நிறுவனத்தில் பெரும் தொகையை முதலீடு செய்ததுடன், நிறுவனத்தின் முகவராக செயல்பட்டு மற்றவர்களிடமிருந்தும் லட்சக்கணக்கில் முதலீடுகளைத் திரட்டிக் கொடுத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.

நிதி நிறுவனம் மூடப்பட்டதைத் தொடர்ந்து, தங்களது பணத்தை திருப்பிக் கேட்டு முதலீட்டாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதிலளிக்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளான இராசு தற்கொலை செய்து கொண்டதாக அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். அவரது தற்கொலைக்கு நீதி கேட்டு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருவதாகவும் கூறியுள்ளார்.

இதனிடையே, எப்.க்யூ.எல் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாந்த ஏராளமானோர் மதுரை மாவட்ட காவல்துறையில் கூட்டம் கூட்டமாக புகார் அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மோசடியின் தன்மை மற்றும் அதன் அளவைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கின் விசாரணையை பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு மாற்றி காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், பணத்தை முதலீடு செய்து ஏமாந்த பொதுமக்களுக்கு எப்போது அவர்களது பணம் மீட்டுத் தரப்படும், எப்போது நீதி கிடைக்கும் என்பது கேள்விக்குறியாக இருப்பதாக அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் திடீர், திடீரென அதிக லாபம் தருவதாகக் கூறி நிதி நிறுவனங்கள் தொடங்கப்படுவதும், பின்னர் பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை வசூலித்து விட்டு நிறுவனங்களை மூடிவிட்டு மோசடி செய்வதும் புதிதல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சராசரியாக ஓராண்டு அல்லது ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை இதுபோன்ற மோசடிகள் நடைபெறுவது வாடிக்கையாகி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கு முன்பு சென்னையில் ஆரூத்ரா, வேலூரில் எல்.என்.எஸ். சர்வதேச நிதிச்சேவை நிறுவனம் மற்றும் திருச்சியில் எல்பின்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் அதிக வட்டி வழங்குவதாகக் கூறி பொதுமக்களிடம் பெரும் தொகையை வசூலித்து மோசடி செய்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த மூன்று நிறுவனங்களும் மாநிலம் முழுவதும் சுமார் 2 லட்சம் பேரிடமிருந்து ரூ.8,625 கோடி வரை வசூலித்து மோசடி செய்ததாகவும், கோவையைச் சேர்ந்த மை வி 3 ஆட்ஸ் (MY V3 Ads) நிறுவனமும் பொதுமக்களிடம் ரூ.2000 கோடி அளவுக்கு மோசடி செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மோசடிகள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பலர் கைது செய்யப்பட்ட போதிலும், பணத்தை இழந்த பொதுமக்களுக்கு இன்னும் முழுமையான நிவாரணம் கிடைக்கவில்லை என்றும் அன்புமணி இராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஒன்றரை ஆண்டுகளில் முதலீட்டுத் தொகையை இரட்டிப்பாக்கித் தருவதாகவும், ஆண்டுக்கு 30 சதவீதம் வரை வட்டி வழங்குவதாகவும் கூறப்படும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை பொதுமக்கள் நம்புவதே இதுபோன்ற மோசடிகளுக்கு முக்கிய காரணமாக அமைவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதிக வட்டி வழங்குதல், நட்சத்திர விடுதிகளில் பிரம்மாண்ட அறிமுக நிகழ்ச்சிகளை நடத்துதல், முதலீடு செய்த சிலருக்கு ஆரம்ப கட்டத்தில் அதிக வட்டித் தொகையை வழங்கி அவர்களின் மூலம் மற்றவர்களிடம் விளம்பரம் செய்தல் போன்ற பல்வேறு வழிமுறைகளின் மூலம் மோசடி நிறுவனங்கள் பொதுமக்களை கவர்ந்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததே இத்தகைய மோசடிகள் தொடர்ந்து நடைபெறுவதற்கு முக்கிய காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக கிராமப்புற மற்றும் குறைந்த விழிப்புணர்வு கொண்ட மக்கள், உண்மையான நிதி நிறுவனங்கள் மற்றும் மோசடி நிறுவனங்களை பகுத்தறிந்து முதலீடு செய்யும் அளவுக்கு போதிய விழிப்புணர்வு பெறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த சூழ்நிலையில், மோசடி நிறுவனங்களை தொடக்க நிலையிலேயே அடையாளம் கண்டு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பதும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவின் முக்கிய கடமை என்றும் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அதிக வட்டி, பரிசுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை வழங்கி, துண்டறிக்கைகள் மற்றும் முழுப்பக்க விளம்பரங்கள் மூலமாக மோசடி நிறுவனங்கள் தொடர்ந்து விளம்பரப்படுத்தி முதலீடுகளைத் திரட்டுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

இத்தகைய நடவடிக்கைகள் காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு தெரியாமல் நடைபெற வாய்ப்பில்லை என்றும், அவ்வாறு தெரிந்தும் பொதுமக்கள் முதலீடு செய்யக் கூடாது என முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்காதது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுபோன்ற மோசடிகளை தடுக்கத் தவறிய காவல்துறையே இந்த மோசடிக்கும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புக்கும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், கடந்த காலங்களிலும் தற்போது நடைபெற்று வரும் மோசடி வழக்குகளிலும், மோசடி நிறுவனங்கள் மீது சாதாரண குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும், இதன் மூலம் குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க வாய்ப்பு ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, இதுபோன்ற பெரும் நிதி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மோசடி நிறுவன உரிமையாளர்களின் பெயர்களில் உள்ள சொத்துகள் மட்டுமின்றி, அவர்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் நெருக்கமானவர்களின் பெயர்களில் மோசடி நிறுவனம் தொடங்கப்பட்ட பின்னர் வாங்கப்பட்ட சொத்துகளையும் விசாரித்து முடக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், நிதி நிறுவனங்களை தொடங்குவதற்கு முன்பு காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவிடம் தடையின்மைச் சான்றிதழ் பெறுவதை கட்டாயமாக்க வேண்டும் என்றும், அதற்கு தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் எப்.க்யூ.எல் (FQL) நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை இழந்த பொதுமக்களுக்கு, அவர்களது பணத்தை உடனடியாக மீட்டுத் தர தமிழக அரசும் காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறு பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ