மக்கள் கருத்து, தரவுகளின் அடிப்படையில் அரசு சேவைகளை மேம்படுத்த வேண்டும் சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுக்கு உத்தரவு
அமராவதி , 01 செப்டம்பர் (ஹி.ச.) மக்களிடம் இருந்து பெறப்படும் கருத்துகள் மற்றும் டேட்டா அனலிட்டிக்ஸ் மூலம் கிடைக்கும் தகவல்களை முறையாக ஆய்வு செய்து, அரசு துறைகள் வழங்கும் குடிமக்கள் சேவைகளை மேலும் மேம்படுத்த வேண்டும் என்று ஆந்திர மாநில முதல்-மந்திர
A


அமராவதி , 01 செப்டம்பர் (ஹி.ச.)

மக்களிடம் இருந்து பெறப்படும் கருத்துகள் மற்றும் டேட்டா அனலிட்டிக்ஸ் மூலம் கிடைக்கும் தகவல்களை முறையாக ஆய்வு செய்து, அரசு துறைகள் வழங்கும் குடிமக்கள் சேவைகளை மேலும் மேம்படுத்த வேண்டும் என்று ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அமராவதியில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் ‘ரியல் டைம் கவர்னன்ஸ்’ தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார்.

அப்போது, அரசு துறைகளின் செயல்பாடுகள் மற்றும் பொதுமக்களின் தேவைகளை தரவுகளின் அடிப்படையில் ஆய்வு செய்து, அதற்கேற்ப சேவைகளில் தேவையான மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

வெளிகொண்டா திட்ட தொடக்க விழா, அல்லூரி விமான நிலையம் தொடர்பான நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றதை சுட்டிக்காட்டிய சந்திரபாபு நாயுடு, இதேபோன்று அரசின் மற்ற நிகழ்ச்சிகளிலும் மக்கள் பங்கேற்பை அதிகரிக்க வேண்டும் என்று கூறினார்.

மாநிலத்தில் தூய்மை பணிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும், இதில் எந்தவித சமரசத்துக்கும் இடமில்லை என்றும் அவர் தெரிவித்தார். நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் தூய்மை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்றும், நலவாழ்வு விடுதிகளில் தூய்மை பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

நலவாழ்வு விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களை ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை விடுதிகளுக்கு அழைத்து கூட்டம் நடத்த வேண்டும் என்றும் சந்திரபாபு நாயுடு அறிவுறுத்தினார். அப்போது விடுதிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு, குடிநீர் மற்றும் அங்குள்ள வசதிகள் குறித்து பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் விடுதிகளின் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையும், பொறுப்புணர்வும் அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.

அன்னா கேன்டீன்கள் மூலம் ஏழை மக்களுக்கு உணவு வழங்க உதவும் நன்கொடையாளர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அரசின் அனைத்து துறைகளும் தங்களது சேவைகளை முழுமையாக ஆன்லைன் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்-மந்திரி உத்தரவிட்டார். வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் வழங்க வேண்டும்.

ஒருங்கிணைந்த சேவை முறையின் மூலம் மக்களுக்கு விரைவாக அரசு சேவைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதி அளவில் அதிகாரிகளின் செயல்திறனை அடிப்படையாக கொண்டு தரவரிசை வழங்க வேண்டும் என்றும், சேவைகளில் காணப்படும் குறைபாடுகளை அவ்வப்போது ஆய்வு செய்து உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

விவசாயத்துறையிலும் தரவுகளை பயன்படுத்தி விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று அவர் கூறினார். ‘AWARE’ தளத்தின் மூலம் மாநிலத்தின் விவசாய நிலைமையை தொடர்ந்து ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளை ஊக்குவிப்பதுடன், தோட்டக்கலை பயிர்களை பாதுகாக்க கிடைக்கக்கூடிய நீர்வளங்களை திறமையாக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

மேலும், மாநிலத்தில் பயன்பாடின்றி உள்ள 5.70 லட்சம் ஏக்கர் நிலங்களை முழுமையாக பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார். பொதுமக்கள் குறைதீர் அமைப்பு (PGRS) மூலம் பெறப்படும் மனுக்களுக்கு விரைவாக தீர்வு காணவும் அவர் வலியுறுத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசின் தலைமைச் செயலாளர் சாய் பிரசாத் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA