2029-ல் தேர்தல் சூழல் மாறும் ,நாடாளுமன்றத்தில் நீட் தூக்கி எறியப்படும் நாள் வரும் – ஆதவ் அர்ஜூனா உறுதி
சென்னை, 01 செப்டம்பர் (ஹி.ச.) 2029-ஆம் ஆண்டு தேர்தல் சூழல் மாறும்போது, நாடாளுமன்றத்தில் நீட் தேர்வு தூக்கி எறியப்படும் நாள் வரும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிவடைந்த பின்னர் அமைச்சர
ஆதவ் அர்ஜுனா


சென்னை, 01 செப்டம்பர் (ஹி.ச.)

2029-ஆம் ஆண்டு தேர்தல் சூழல் மாறும்போது, நாடாளுமன்றத்தில் நீட் தேர்வு தூக்கி எறியப்படும் நாள் வரும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிவடைந்த பின்னர் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசினார். அப்போது, நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்கள் மற்றும் மாணவி அனிதாவின் நினைவு தினம் குறித்து அவர் உருக்கமாக கருத்து தெரிவித்தார்.

அவர் பேசுகையில், இன்று மாணவி அனிதாவின் நினைவு தினம் என குறிப்பிட்டார். கடந்த 2017-ஆம் ஆண்டு மாநில பாடத்திட்டத்தில் 12-ஆம் வகுப்பு படித்த அனிதா அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்த போதிலும், மருத்துவக் கல்வி கனவை நீட் தேர்வு முறை பாதித்ததாக அவர் கூறினார்.

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும், பல்வேறு காலகட்டங்களில் தமிழக சட்டப்பேரவையிலும் இதுதொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார். மூன்று முதலமைச்சர்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தற்போதைய முதலமைச்சர் விஜய் உள்ளிட்டோர் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அரசியல் வேறுபாடுகளை கடந்து, நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“2029-ஆம் ஆண்டு தேர்தல் சூழல் மாறும்போது, அனிதாவின் நினைவு நாளான இந்த நாள், நாடாளுமன்றத்தில் நீட் தூக்கி எறியப்பட்ட நாளாக மாறும்” என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.

மேலும், மாணவர்கள் நம்பிக்கையுடனும் உறுதியுடனும் இருக்க வேண்டும் என்றும், இனி ஒரு மாணவரின் உயிரும் இதுபோன்ற காரணங்களால் பறிபோகக்கூடாது என்றும் அவர் உருக்கமாக பேசினார். ஒரு நாள் வெற்றி நிச்சயம் தமிழகத்தின் பக்கம் வரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் சட்டப்பேரவையில் கருத்து தெரிவித்தார். மாணவி அனிதாவின் ஒன்பதாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியை சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடத்த அனுமதி கோரப்பட்டதாகவும், அதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, பெசன்ட் நகர் பகுதியில் மாதா கோவில் திருவிழா மற்றும் பிற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதால் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்தார். வேறு நாளில் அனுமதி கோரப்பட்டால் அதுகுறித்து அரசு பரிசீலித்து முடிவு எடுக்கும் என்றும் அவர் கூறினார்.

நீட் தேர்வுக்கு எதிரான தமிழகத்தின் அரசியல் நிலைப்பாடு மீண்டும் சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2029 தேர்தல் சூழல் மாறும்போது நீட் தேர்வை நாடாளுமன்றம் ரத்து செய்யும் நாள் வரும் என்ற அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam