Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில், கதர் மற்றும் பட்டு உற்பத்தி, பனைப் பொருட்கள் விற்பனை உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சிக்காக பல்வேறு புதிய அறிவிப்புகளை அமைச்சர் விஜய் பாலாஜி வெளியிட்டார்.
அதன்படி, திருச்சி, சேலம் மற்றும் தஞ்சாவூர் கதரங்காடிகள் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கதர் மற்றும் பட்டு உற்பத்திப் பணிகளில் ஈடுபட்டுள்ள நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களுக்கான நலநிதி பங்குத் தொகை 12 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
தி.மலை மாவட்டம் ஜமுனாமரத்தூரில், ஜவ்வாது மலைத்தேன் அலகு ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் மத்திய கதர் ஆணையக் குழுவின் உதவியுடன் அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
அதேபோல், திருநெல்வேலி மாவட்ட பனைப் பொருட்கள் விற்பனை கூட்டுறவு சம்மேளனத்தின் தூத்துக்குடி தலைமை அலுவலகக் கட்டடம் மற்றும் வள்ளியூர் பனைப் பொருட்கள் இருப்புக் கிடங்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு மாநில பனைவெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையத்திற்குச் சொந்தமான இடங்களில் 10 புதிய விற்பனை அங்காடிகள் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் விஜய் பாலாஜி அறிவித்துள்ளார்.
இந்த புதிய அறிவிப்புகள் கதர், பட்டு மற்றும் பனைத் தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, பாரம்பரிய தொழில்களின் வளர்ச்சிக்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam