Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 செப்டம்பர் (ஹி.ச.)
சென்னை ஓஎம்ஆர் பகுதியில் உள்ள ஐடி நிறுவன வளாகத்தில் செயல்பட்டு வரும் இரண்டு முன்னணி தனியார் நிறுவனங்களில் சுமார் 50 வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை பெருங்குடி மற்றும் தரமணியை இணைக்கும் பிரதான சாலையான எம்ஜிஆர் சாலையில் அமைந்துள்ள குளோபல் இன்போசிட்டி பார்க் ஐடி நிறுவன வளாகத்தில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
கந்தன்சாவடியில் செயல்பட்டு வரும் பிரபல ரியல் எஸ்டேட் சேவைகள் நிறுவன அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு தொடர்பாக கிடைத்த புகார்களின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், குளோபல் இன்போசிட்டி பார்க் வளாகத்தில் செயல்பட்டு வரும் விளம்பரம், வெளியீடு மற்றும் சந்தைப்படுத்தல் சேவைகளை வழங்கும் வெளிநாட்டு நிறுவனமான
டேக் இந்தியா பிரைவேட் லிமிடெட் அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரே நேரத்தில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள இந்த நிறுவனங்களில் சோதனை நடத்துவதற்காக சுமார் 15 வாகனங்களில் 50-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிகாரிகள் நிறுவனங்களின் நிதிப் பரிவர்த்தனைகள், கணக்கு ஆவணங்கள் மற்றும் முக்கிய பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்த திடீர் வருமான வரித்துறை சோதனை காரணமாக ஓஎம்ஆர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam