சென்னையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ தேர்வுக்கு இலவச பயிற்சி – செப்டம்பர் 3 முதல் வகுப்புகள் தொடக்கம்
சென்னை, 01 செப்டம்பர் (ஹி.ச) சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான போட்டித் தேர்வர்களுக்கு, தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்
Malathi


சென்னை, 01 செப்டம்பர் (ஹி.ச)

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான போட்டித் தேர்வர்களுக்கு, தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் வரும்

செப்டம்பர் 3-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளன.

தகுதியும் விருப்பமும் உள்ள தேர்வர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ். மாலதிஹெலன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் பங்கேற்க விரும்பும் தகுதியான தேர்வர்கள் வரும் செப்டம்பர் 9, 2026 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதியாக பட்டப்படிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு, தேர்வு நடைமுறை, பாடத்திட்டம் மற்றும் இதர தகுதி விவரங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வர்கள் அறிந்து கொள்ளலாம்.

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்கள் சிறப்பாக தயாராகும் வகையில், சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

இந்தப் பயிற்சி வகுப்புகள் வரும் 03.09.2026 (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சியில் பங்கேற்கும் தேர்வர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் வாரந்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. மேலும், மாநில அளவிலான முழுமையான மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்வர்கள் தங்களது தயாரிப்பு நிலையை அறிந்து கொண்டு, தேர்வை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

இப்பயிற்சி வகுப்பில் சேர தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விவரங்களை சென்னை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள கூகுள் படிவத்தின் மூலம் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களின் வசதிக்காக தன்னார்வ பயிலும் வட்ட நூலகத்தில் RRB, TNPSC, TNUSRB மற்றும் SSC உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குத் தேவையான புத்தகங்கள் உள்ளன.

மாணவர்கள் சுயமாகப் படித்து போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் Study Hall வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை போட்டித் தேர்வர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குத் தேவையான மென்பாடக் குறிப்புகளையும் தமிழ்நாடு தொழில் வழிகாட்டுதல் மற்றும் வேலைவாய்ப்பு சேவைகளின் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இலவச பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் தேர்வர்கள், தாங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பித்ததற்கான விண்ணப்ப நகல், ஆதார் அட்டையின் நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் ஆகியவற்றுடன் நேரடியாக சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுகலாம்.

இதற்காக தேர்வர்கள் சென்னை-32, கிண்டி பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அலுவலக வேலை நாட்களில் நேரில் அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு decgcguindy@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளலாம்.

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான மற்றும் ஆர்வமுள்ள போட்டித் தேர்வர்கள், தமிழ்நாடு அரசு வழங்கும் இந்த இலவச பயிற்சி வாய்ப்பை பயன்படுத்தி டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகளுக்கு சிறப்பாக தயாராகி பயன்பெறுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ். மாலதிஹெலன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ