Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 01 செப்டம்பர் (ஹி.ச.)
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வைப்பதற்காக சேலம் வருகை தந்துள்ள முதலமைச்சர் விஜய்க்கு வழிநெடுகிலும் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.
இன்று காலை சென்னையிலிருந்து சேலம் விமான நிலையத்தில் வந்திறங்கிய முதலமைச்சர் விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாக மேட்டூர் நோக்கி பயணம் மேற்கொண்டார்.
சேலம் விமான நிலையத்திலிருந்து மேட்டூர் செல்லும் சாலை முழுவதும் இருபுறமும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்தினர் பெருந்திரளாக கூடி, கொடிகளை அசைத்தும், கோஷங்களை எழுப்பியும், மலர்களை தூவியும் முதலமைச்சரை வரவேற்றனர். சாலையோரங்களில் நின்றிருந்த பொதுமக்களும் கைகளை அசைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதனால் சேலம் - மேட்டூர் சாலையே விழாக்கோலம் பூண்டது போல் காட்சியளித்தது.
மேச்சேரி பகுதியில் திறந்த வேனில் நின்றபடி, சாலையின் இருபுறமும் கூடியிருந்த பொது மக்களையும், தமிழக வெற்றிக் கழக தொண்டர்களையும் நோக்கி கையசைத்து உற்சாகமாக வலம் வந்தார்.
டெல்டா மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான மேட்டூர் அணை திறப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்று, பாசனத்திற்காக அணையை திறந்து வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அணை நீரைத் திறந்த பின், மேட்டூர் அணை குறித்த புகைப்படக் கண்காட்சியை முதல்வர் பார்வையிடுகிறார். மேலும் அணையின் மின் உற்பத்தி நிலையத்திற்கும் அவர் செல்லவுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b