Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 செப்டம்பர் (ஹி.ச.)
கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், தந்தை பெரியாரின் சிலையை உடைப்பதாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டதாகவும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குறித்து தரக்குறைவாக விமர்சனம் செய்ததாகவும் எச். ராஜா மீது தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த எம்.பி.எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம், கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டு வழக்குகளிலும் எச். ராஜா குற்றவாளி என தீர்மானித்து, ஒவ்வொரு வழக்குக்கும் தலா ஆறு மாதங்கள் சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்களுக்கு தண்டனையை நிறுத்தி வைத்தும் உத்தரவிடப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து எச். ராஜா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இன்று இம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது சிறப்பு நீதிமன்றத்தின் இரு தீர்ப்புகளையும் முழுமையாக ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமி நாராயணன், எச். ராஜாவின் சமூக வலைதள பதிவுகளால் சமூகத்தில் பொது அமைதிக்கு இடையூறு ஏற்பட்டதாகவோ, கலவரம் ஏற்படும் சூழல் உருவானதாகவோ அரசு தரப்பில் எந்தவிதமான உறுதியான ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அரசியல் விமர்சனங்களை அவதூறு வழக்குகளாக கருத முடியாது என்றும், கருத்து சுதந்திரத்தின் எல்லைக்குள் இது அடங்கும் என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b