Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 01 செப்டம்பர் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரயில்கள் மூலம் வந்து செல்கின்றனர்.
பழனிக்கு வரும் ரயில் பயணிகள் மற்றும் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்களது உடைமைகள், லக்கேஜ்களைப் பாதுகாப்பாக வைத்துச் செல்லும் வகையில், மத்திய அரசின் 'மேக் இன் இந்தியா' (Make in India) திட்டத்தின் கீழ் அதிநவீன ஸ்மார்ட் டிஜிட்டல் லக்கேஜ் லாக்கர் வசதி (Durolt / Fonzel Digital Luggage Locker) பழனி ரயில் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இச்சேவையின் தொடக்க விழா இன்று பழனி ரயில் நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது. ரயில்வே வணிகப் பிரிவு ஆய்வாளர் (Commercial Inspector) அசோக்ராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, ரிப்பன் வெட்டி டிஜிட்டல் லாக்கர் அமைப்பைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) காவலர்கள், ரயில் நிலைய அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பயணிகள் பலர் கலந்துகொண்டனர்.
க்யூஆர் கோட் மூலம் எளிமையான பயன்பாடு:
இந்த டிஜிட்டல் லாக்கரில் பயணிகள் தங்களது செல்போன் மூலம் QR Code-ஐ ஸ்கேன் செய்து, எளிதாக முன்பதிவு செய்து தங்களது உடைமைகளைப் பாதுகாப்பாகப் பூட்டி வைக்கலாம்.
பின்னர் தேவையான நேரத்தில் மீண்டும் ஸ்கேன் செய்து பொருட்களை எடுத்துக்கொள்ளும் நவீன தானியங்கி தொழில்நுட்பத்துடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
பழனிக்கு வரும் பக்தர்கள் மலைக்கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டுத் திரும்பும் வரை தங்களது உடைமைகளை அச்சமின்றிப் பாதுகாப்பாக வைக்க இந்த டிஜிட்டல் லாக்கர் சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனப் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN