எடப்பாடியில் மினி ஸ்டேடியம் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் - எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்
சென்னை, 01 செப்டம்பர் (ஹி.ச.) சட்டப்பேரவையில் இன்று எடப்பாடியில் அமைக்கப்பட்டு வரும் மினி ஸ்டேடியம் பணிகள் குறித்து காரசார விவாதம் நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று பேசுகையில், எடப்பாடி தொகுதியில் மினி
எடப்பாடியில் மினி ஸ்டேடியம் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் - எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்


சென்னை, 01 செப்டம்பர் (ஹி.ச.)

சட்டப்பேரவையில் இன்று எடப்பாடியில் அமைக்கப்பட்டு வரும் மினி ஸ்டேடியம் பணிகள் குறித்து காரசார விவாதம் நடைபெற்றது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று பேசுகையில், எடப்பாடி தொகுதியில் மினி ஸ்டேடியம் அமைக்கும் பணி மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. விளையாட்டு வீரர்களின் நலன் கருதி அந்தப் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மினி ஸ்டேடியம் அமைக்க ஒதுக்கப்பட்ட மூன்று கோடி ரூபாய் நிதி போதுமானதாக இல்லை என்பது தெரியவந்துள்ளது. தரமான மைதானத்தை உருவாக்க கூடுதல் நிதி தேவைப்படுகிறது. எனவே தற்போது மினி ஸ்டேடியம் அமைக்கும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளோம். நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகு பணிகள் மீண்டும் தொடங்கப்படும் என்று விளக்கம் அளித்தார்.

மேலும் அவர் பேசுகையில், தமிழகத்தில் விளையாட்டை மேம்படுத்தும் வகையில் 10 இடங்களில் ஒலிம்பிக் தரத்திலான மைதானங்களை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். இதில் ஒரு மைதானம் கோவையில் அமையவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பணி குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான டெண்டருக்கு இதுவரை எந்த நிறுவனமும் விண்ணப்பிக்கவில்லை. இதனால் அந்தப் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் டெண்டர் கோரப்படும் என்றார்.

இறுதியாக, புதிதாக அமைக்கப்படும் அனைத்து விளையாட்டு மைதானங்களும் 365 நாட்களும் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் வகையில், அனைத்து வசதிகளுடனும் தரமாக அமைக்கப்படும் என்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உறுதி அளித்தார்.

Hindusthan Samachar / vidya.b