Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 01 செப்டம்பர் (ஹி.ச.)
தூத்துக்குடியில் தனியார் பங்களிப்புடன் தலா 800 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அனல்மின் திட்டங்களை அறிவித்திருப்பது தேவையா என தமிழ்நாடு சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
2006 முதல் 2011-ம் ஆண்டு வரையிலான கலைஞர் ஆட்சிக் காலத்தில் வடசென்னை, மேட்டூர், வல்லூர், உடன்குடி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 6,000 மெகாவாட்டுக்கும் அதிகமான அனல்மின் திட்டங்கள் உருவாக்கப்பட்டு, பணிகள் நிறைவடைந்து தற்போது பயன்பாட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
2011 முதல் 2021 வரையிலான 10 ஆண்டுகளில் புதிய அனல்மின் திட்டப் பணிகள் தொடங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2021-ல் திமுக ஆட்சி பொறுப்பேற்றபோது சுமார் 1,000 மெகாவாட் அளவுக்கு மட்டுமே சோலார் மின் உற்பத்தி இருந்ததாகவும், கடந்த 5 ஆண்டுகளில் நவீன சோலார் மின் திட்டங்கள் மூலம் 15,000 மெகாவாட்டுக்கும் அதிகமான மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அப்பாவு தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாற்றப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது வீடுகளில் சோலார் மின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு மானியம் வழங்கி வருவதால், அடுத்த 5 ஆண்டுகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வீடுகள் சோலார் மின் திட்டத்தை பயன்படுத்தும் நிலை உருவாகும் என்றும், இதனால் மின் தேவைகள் குறைந்து தமிழ்நாடு மின்துறையில் தன்னிறைவு பெறும் என்றும் அப்பாவு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நவீன சோலார் பேக்கப் தொழில்நுட்பம் மூலம் இரவு நேரங்களிலும் மின்சாரத்தைப் பயன்படுத்த முடியும் என்ற சூழலில், தூத்துக்குடியில் 110 விதியின் கீழ் தனியார் பங்களிப்புடன் 1,600 மெகாவாட் திறன் கொண்ட சுற்றுச்சூழலை பாதிக்கும் அனல்மின் திட்டத்தை அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“தமிழ்நாடு மின் வாரியத்தை தனியாருக்கு விற்பனை செய்வதற்காக இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதா?” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நோக்கி அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P