Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 செப்டம்பர் (ஹி.ச.)
இன்றைய சட்டப்பேரவையில் பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட், காமராஜரின் உடலை அடக்கம் செய்வதற்கு மெரினா கடற்கரையில் இடம் தர அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி மறுத்துவிட்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த கருத்துக்கு பதிலளித்து பேசிய முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, இது முற்றிலும் வரலாற்றை திரித்து கூறும் தவறான தகவல் என்று தெளிவுபடுத்தினார்.
1975-ம் ஆண்டு காமராஜர் மறைந்தபோது, அவரது உடலை தேனாம்பேட்டையில் அவர் வாழ்ந்து வந்த வீட்டிலேயே அடக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினரே கேட்டுக்கொண்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அந்த சூழலில், பெருந்தலைவர் காமராஜர் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல, அவர் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும், தமிழ் மக்களுக்கும் சொந்தமான பொதுச்சொத்து என்று கூறிய முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, அவருக்கு உரிய அரசு மரியாதை அளிக்க உத்தரவிட்டார்.
அதன்படி ராஜாஜி மண்டபத்தில் காமராஜரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு முழு அரசு மரியாதை அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் அவரது இறுதிச் சடங்கிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசே முன்னின்று செய்து கொடுத்தது என்ற வரலாற்று உண்மையை முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் இன்று எடுத்துரைத்தார்.
சமூக ஊடகங்களிலும் சில அரசியல் மேடைகளிலும்,
காமராஜருக்கு மெரினாவில் கலைஞர் இடம் தர மறுத்தார் எனத் திட்டமிட்டுப் பரப்பப்படும் செய்திகள் யாவும் உண்மைக்கு புறம்பானவை என்றும், அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் அப்போதைய முக்கியத் தலைவர்களான பழ. நெடுமாறன் போன்றோரே இத்தகவலை ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளனர் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
Hindusthan Samachar / vidya.b