Enter your Email Address to subscribe to our newsletters

சிவகங்கை, 01 செப்டம்பர் (ஹி.ச.)
மதுரை மாவட்டம் மேலூரை தலைமையிடமாகக் கொண்டு FQL என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
அந்த நிறுவனத்தின் மொபைல் செயலி மூலம் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 45 நாட்களில் இரண்டு மடங்கு தொகை திரும்ப கிடைக்கும் என பொதுமக்களுக்கு கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதனை நம்பி மேலூரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மட்டுமின்றி, ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் தலா லட்சக்கணக்கான ரூபாய் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த முறையில் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக கூறி, கடந்த இரண்டு நாட்களாக ஆயிரக்கணக்கானோர் காவல் நிலையங்கள் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக கூறி ஏற்கனவே மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால், காளையார்கோவில், மறவமங்கலம், திருப்புவணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் FQL நிறுவனத்திற்காக ஏஜெண்டுகளாக செயல்பட்டதாக கூறப்படும் சிவகங்கை அருகேயுள்ள பையூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் மதுரை மாவட்டம் மாணிக்கம்பட்டியைச் சேர்ந்த சதீஷ் ஆகிய இருவரையும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் மோசடி தொடர்பாகவும், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட பணம் எவ்வாறு கையாளப்பட்டது என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam