மதுரை உள்ளிட்ட 14 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கோரிய வழக்கு - அரசு பதிலளிக்க உத்தரவு
மதுரை, 01 செப்டம்பர் (ஹி.ச.) மதுரை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்கக் கோரிய வழக்கில், தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலர்,
உயர்நீதிமன்றம்


மதுரை, 01 செப்டம்பர் (ஹி.ச.)

மதுரை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்கக் கோரிய வழக்கில், தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலர், பொதுப்பணித்துறை செயலர் மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை செயலர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த மணிபாரதி தாக்கல் செய்த மனுவில், மதுரை அமர்வு வரம்புக்குட்பட்ட அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க வேண்டும் என கோரியிருந்தார்.

மேலும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடு, பயன்பாடு மற்றும் பராமரிப்பு தொடர்பான பதிவுகளை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து, அவற்றை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும், பசுமை மற்றும் காலநிலைத் தாங்குதிறன் கொண்ட சுகாதார நிலையங்களுக்கான வழிகாட்டுதல்களை முறையாக நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

வழக்கு தொடர்பாக மேற்கண்ட மூன்று துறைகளின் செயலர்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை அக்டோபர் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P