பெண்கள் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கக்கூடாது- கேரள மதகுருவின் சர்ச்சை பேச்சுக்கு கடும் எதிர்ப்பு
கொச்சி , 01 செப்டம்பர் (ஹி.ச.) பெண்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும், அவர்களை பொதுவெளிக்கு கொண்டு வருவது ‘பெரும் அழிவுக்கு’ வழிவகுக்கும் என்றும் கேரளாவை சேர்ந்த பிரபல முஸ்லிம் மதகுரு ஷேக் அபுபக்கர் அகமது கூறியத
A


கொச்சி , 01 செப்டம்பர் (ஹி.ச.)

பெண்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும், அவர்களை பொதுவெளிக்கு கொண்டு வருவது ‘பெரும் அழிவுக்கு’ வழிவகுக்கும் என்றும் கேரளாவை சேர்ந்த பிரபல முஸ்லிம் மதகுரு ஷேக் அபுபக்கர் அகமது கூறியதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

காந்தபுரம் அபுபக்கர் முஸ்லியார் என்று அழைக்கப்படும் ஷேக் அபுபக்கர் அகமது, சமஸ்தான கேரள ஜம்இய்யத்துல் உலமா மற்றும் அகில இந்திய சன்னி ஜம்இய்யத்துல் உலமா ஆகிய அமைப்புகளின் பொதுச்செயலாளராக உள்ளார்.

கொச்சியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் அவர் கூறுவது:

பெண்கள் தங்களது கண்ணியத்தை பாதுகாத்துக்கொள்ள முகத்தையும் உடலையும் முழுமையாக மறைக்கும் புர்கா ஆடையை அணிய வேண்டும் என்று இஸ்லாமிய நடைமுறை வலியுறுத்துகிறது.

பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும், பொதுவெளியில் நுழையக்கூடாது என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது.

இந்த கட்டுப்பாடுகள் பெண்களை குறைத்து மதிப்பிடுவதற்காக விதிக்கப்பட்டவை அல்ல. மாறாக, பெண்களை கவுரவிப்பதற்கும், அவர்களை பாதுகாப்பதற்குமே இந்த நடைமுறைகள் உள்ளன என்று அவர் கூறியதாக தெரிகிறது.

தங்க நகையுடன் ஒப்பீடு

மேலும், பெண்களை பொதுவெளிக்கு கொண்டு வருவது பெரும் அழிவுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு உதாரணமாக, தங்க நெக்லஸ் ஒன்றை சாலையோரத்தில் விட்டுவிட்டால் அதை பலரும் தொடுவார்கள்.

இதனால் அதன் அழகும் மதிப்பும் பாதிக்கப்படும். அந்த நெக்லஸ் தனது அழகையும் மதிப்பையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமானால், அது பாதுகாப்பான பெட்டிக்குள் வைக்கப்பட வேண்டும்.

அதுபோல பெண்களும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற கருத்தை அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அரசியல் கட்சிகள், பெண்கள் அமைப்புகள் கண்டனம்

ஷேக் அபுபக்கர் அகமதுவின் இந்த கருத்துக்கு கேரளாவில் பல்வேறு அரசியல் கட்சிகளும், பெண்கள் அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

பெண்களின் சுதந்திரம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொதுவாழ்க்கையில் அவர்களின் பங்களிப்பை கட்டுப்படுத்தும் வகையில் இதுபோன்ற கருத்துகள் அமைவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் கேரளாவில் இந்த விவகாரம் தொடர்பாக புதிய சர்ச்சை உருவாகி உள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA