கோடம்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1.80 லட்சம், 30 சவரன் நகை திருட்டு – சோளிங்கரில் பதுங்கியிருந்த ‘மார்க்கெட் சுரேஷ்’ கைது
சென்னை, 01 செப்டம்பர் (ஹி.ச.) சென்னை கோடம்பாக்கம் சுப்ரமணியன் நகர் 2-வது தெருவில் உள்ள நவரங் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பாஸ்கர் (53). இவர் மணலி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் பர்சேஸ் பிரிவில் பணியாற்றி வருகிறார்.
Jm


சென்னை, 01 செப்டம்பர் (ஹி.ச.)

சென்னை கோடம்பாக்கம் சுப்ரமணியன் நகர் 2-வது தெருவில் உள்ள நவரங் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பாஸ்கர் (53). இவர் மணலி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் பர்சேஸ் பிரிவில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், பாஸ்கர் கடந்த 29-ம் தேதி இரவு தனது குடும்பத்தினருடன் சேலத்தில் நடைபெற்ற தங்கை மகளின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார்.

பாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் வீட்டில் இருந்த பீரோக்களை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.1.80 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் 30 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.

மறுநாள் வீட்டிற்கு திரும்பிய பாஸ்கர், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதையும், பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அவர் அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

திருட்டில் ஈடுபட்ட நபரை கண்டுபிடிப்பதற்காக அசோக் நகர் போலீசார் தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்தினர். சம்பவம் நடைபெற்ற பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தும், சந்தேக நபர்கள் குறித்து விசாரணை நடத்தியும் போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த விசாரணையில், கோடம்பாக்கம் வீட்டில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தில் பிரபல கொள்ளையனான ‘மார்க்கெட் சுரேஷ்’ (49) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து தனிப்படை போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்த நிலையில், அவர் சோளிங்கர் பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்த போலீசார், சுரேஷை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருடப்பட்ட ரூ.1.80 லட்சம் ரொக்கம் மற்றும் 30 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டதா, இந்த திருட்டில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட ‘மார்க்கெட் சுரேஷ்’ மீது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏராளமான திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இவர் ஏற்கனவே குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / P YUVARAJ