மதுரையில் ஒலிம்பிக் அகாடமி உருவாக்கப்படும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதி
சென்னை, 01 செப்டம்பர் (ஹி.ச) சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசினார். அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் பேசுகையில், தமிழகத்தின் தென் மாவட்டங
மதுரையில் ஒலிம்பிக் அகாடமி உருவாக்கப்படும் -  அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதி


சென்னை, 01 செப்டம்பர் (ஹி.ச)

சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசினார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் பேசுகையில், தமிழகத்தின் தென் மாவட்டங்கள் தடகள வீரர்களின் பிறப்பிடமாக திகழ்வதாக குறிப்பிட்டார். குறிப்பாக டெல்டா பகுதிகளில் இருந்து தான் மிக வேகமாக ஓடக்கூடிய திறன் கொண்ட விளையாட்டு வீரர்கள் அதிகளவில் உருவாகி வருகிறார்கள் என்றும், அவர்களின் இயற்கையான திறமையை முறையாக கண்டறிந்து சர்வதேச அளவில் கொண்டு செல்ல வேண்டியது அரசின் கடமை என்றும் அவர் தெரிவித்தார்.

இதன் ஒரு பகுதியாக, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் விளையாட்டு வீரர்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். அங்குள்ள விளையாட்டு மைதானங்கள் நவீனப்படுத்தப்பட்டு, தேவையான பயிற்சி உபகரணங்கள் வழங்கப்படும். இதற்காக சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தனித் திட்டம் வகுக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

மேலும், தமிழக விளையாட்டு வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமையும் வகையில், மதுரையில் சர்வதேச தரத்திலான ஸ்போர்ட்ஸ் ஒலிம்பிக் அகாடமி உருவாக்கப்பட இருப்பதாகவும் அவர் அறிவித்தார். இந்த அகாடமியில் ஒலிம்பிக் போட்டிகளுக்கு வீரர்களை தயார்படுத்தும் வகையில் உலகத் தரத்திலான பயிற்சிகள், நிபுணத்துவம் வாய்ந்த பயிற்சியாளர்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகள் இடம்பெறும் என்று தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு விளையாட்டு மைதானங்களிலும் வீரர்களின் உடல் தகுதியை மேம்படுத்துவதற்காக தரமான அத்லெடிக் டிராக் மற்றும் நவீன ஜிம் வசதிகளை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டார்.

இதன் மூலம் கிராமப்புற மற்றும் சிறு நகரங்களைச் சேர்ந்த வீரர்களும் சர்வதேச தரத்திலான பயிற்சியை தங்கள் சொந்த ஊரிலேயே பெற முடியும் என்றும் அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b