முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு - மத்திய அரசின் நிபுணர் குழு இன்று முதல் 3 நாட்கள் விரிவான ஆய்வு
கூடலூர், 01 செப்டம்பர் (ஹி.ச) முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய அரசின் அணை பாதுகாப்பு மதிப்பீட்டு பொறியாளர்கள் குழு இன்று முதல் கள ஆய்வை தொடங்கியுள்ளது. தேசிய நீர்மின் கழகத்தின் (NHPC) முன்னாள் தலைவரும், மு
Mullaperiyar Dam Safety – Central Government Expert Committee


கூடலூர், 01 செப்டம்பர் (ஹி.ச)

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய அரசின் அணை பாதுகாப்பு மதிப்பீட்டு பொறியாளர்கள் குழு இன்று முதல் கள ஆய்வை தொடங்கியுள்ளது.

தேசிய நீர்மின் கழகத்தின் (NHPC) முன்னாள் தலைவரும், முதன்மை நிர்வாக இயக்குனருமான பல்ராஜ் ஜோஷி தலைமையிலான இந்த நிபுணர் குழு, வரும் செப்டம்பர் 3-ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு அணையின் பல்வேறு பகுதிகளில் தீவிர ஆய்வு மேற்கொள்ள உள்ளது.

இந்த ஆய்வின் போது பிரதான அணை, பேபி அணை, மதகுகள், நீர் வெளியேற்றும் சுரங்கப் பகுதிகள் மற்றும் அணையின் கட்டமைப்பு உறுதித்தன்மை உள்ளிட்ட முக்கிய இடங்கள் விரிவாக பரிசோதிக்கப்பட உள்ளன. அணையின் தற்போதைய நீர்மட்டம், நீர் கசிவு, பராமரிப்பு பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் குழுவினர் நேரில் ஆய்வு செய்து தரவுகளை சேகரிக்கின்றனர்.

தமிழகம் - கேரளா இடையே நீண்டகாலமாக நிலவி வரும் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல் மற்றும் மத்திய நீர்வளத் துறையின் உத்தரவின் பேரில் இந்த ஆய்வு நடைபெறுகிறது.

மூன்று நாள் கள ஆய்வை முடித்த பிறகு, நிபுணர் குழு தனது விரிவான அறிக்கையை மத்திய நீர்வளத் துறையிடம் சமர்ப்பிக்க உள்ளது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் அணையின் பாதுகாப்பு குறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b