நேபாளத்திற்கு கைலாய யாத்திரை முடித்து கோவை திரும்பிய 28 தமிழக பக்தர்கள் – கண்ணீர் மல்க வரவேற்ற குடும்பத்தினர்
கோவை, 01 செப்டம்பர் (ஹி.ச.) கைலாய யாத்திரைக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்ற 28 பேர், நேபாளம் வழியாக தங்களது பயணத்தை மேற்கொண்டிருந்தனர். அப்போது நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன
பக்தர்கள்


கோவை, 01 செப்டம்பர் (ஹி.ச.)

கைலாய யாத்திரைக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்ற 28 பேர், நேபாளம் வழியாக தங்களது பயணத்தை மேற்கொண்டிருந்தனர்.

அப்போது நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.

வெள்ள பாதிப்பு ஏற்படுவதற்கு ஒரு நாள் முன்பு வரை தாங்கள் நேபாளத்தில் பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் இருந்ததாகவும் அதன் பின்னர் அங்கிருந்து கைலாய யாத்திரைக்காக புறப்பட்டுச் சென்றதாகவும் யாத்திரிகர்கள் தெரிவித்தனர்.

தாங்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற பின்னர் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதால், பெரும் ஆபத்தில் இருந்து தப்பியதாக அவர்கள் உருக்கமாக கூறினர்.

வெள்ளம் மற்றும் பாதிப்புகள் குறித்த தகவல்கள் கிடைத்தபோது தங்களது குடும்பத்தினர் மிகுந்த அச்சத்திலும் பதற்றத்திலும் இருந்ததாகவும், தங்களது பாதுகாப்பு குறித்து தொடர்ந்து கவலைப்பட்டதாகவும் யாத்திரிகர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து,சீன அரசு தங்களை பாதுகாப்பான முறையில் அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவுமம், அதன் மூலம் தாங்கள் பாதுகாப்பாக வெளியேற முடிந்ததாகவும் அவர்கள் கூறினர்.

மேலும், தங்களை பாதுகாப்பாக மீட்டு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசும், தமிழக அரசும் உறுதுணையாக செயல்பட்டதாகவும், அதிகாரிகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் யாத்திரிகர்கள் தெரிவித்தனர்.

பல நாட்கள் யாத்திரை மேற்கொண்டு விட்டு சொந்த ஊர் திரும்பிய நிலையில், விமான நிலையத்தில் தங்களது குடும்பத்தினரை பார்த்ததும் யாத்திரிகர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

குடும்பத்தினரும் மலர், பூங்கொத்துகள் கொடுத்து அவர்களை வரவேற்றனர். சில குடும்பத்தினர் தங்களது உறவினர்களை நீண்ட நேரம் கட்டியணைத்து கண்ணீர் மல்க வரவேற்ற காட்சிகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தின.

ஒரு நாள் முன்பு வரை நாங்கள் நேபாளத்தில் இருந்தோம். அதன் பின்னர் கைலாய யாத்திரைக்காக புறப்பட்டுச் சென்றதால் தப்பித்தோம். அந்த நேரத்தில் ஏற்பட்ட சம்பவத்தை நினைத்தாலே அச்சமாக உள்ளது.

தற்போது பாதுகாப்பாக குடும்பத்தினரிடம் திரும்பியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என யாத்திரிகர்கள் உருக்கமாக தெரிவித்தனர்.

நேபாள வெள்ள பாதிப்பிலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பித்து, கைலாய யாத்திரையை முடித்துக் கொண்டு தமிழகத்தைச் சேர்ந்த 28 பேர் பாதுகாப்பாக கோவை திரும்பிய சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam