Enter your Email Address to subscribe to our newsletters

நியூ டெல்லி , 01 செப்டம்பர் (ஹி.ச.)
இன்டர்நெட் இணைப்பு இல்லாமலேயே பணப் பரிவர்த்தனை செய்யும் வகையில், ‘போன்பே யுபிஐ 123பே’ என்ற புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய டிஜிட்டல் உலகில் ஸ்மார்ட்போன் மூலம் பல்வேறு சேவைகளை எளிதாகப் பயன்படுத்த முடிகிறது. குறிப்பாக கூகுள் பே, போன்பே உள்ளிட்ட செயலிகள் மூலம் ஒரு சில நொடிகளில் பணம் அனுப்பவும், பெறவும் முடிகிறது. பெட்டிக்கடை முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை பல்வேறு இடங்களில் தற்போது யுபிஐ மூலமாகவே பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், ஸ்மார்ட்போன் மற்றும் இணைய வசதி இல்லாதவர்களும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ளும் வகையில் போன்பே நிறுவனம் ‘யுபிஐ 123பே’ என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் சாதாரண பட்டன் போன்களைப் பயன்படுத்துபவர்களும் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இன்னும் சாதாரண மாடல் மொபைல் போன்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக கிராமப்புறங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் ஸ்மார்ட்போன் மற்றும் இணைய வசதி இல்லாதவர்கள் அதிகம் உள்ளனர்.
இவர்களுக்கும் யுபிஐ அடிப்படையிலான டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சேவைகளை வழங்கும் நோக்கில் இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இன்டர்நெட் தேவையில்லை
இந்த புதிய சேவை இணைய இணைப்பை சார்ந்திருக்காமல் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. SMS அடிப்படையிலான தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால், இன்டர்நெட் வசதி இல்லாத நிலையிலும் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக குறைந்த அளவிலான 2ஜி இணைப்பு மட்டுமே கிடைக்கும் பகுதிகளிலும் இந்த சேவை செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள் மட்டுமின்றி, இணைய இணைப்பு குறைவாக உள்ள பகுதிகளில் வசிப்பவர்களும் டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனை செய்ய முடியும்.
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய வசதி, பட்டன் போன் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA